Published : 13 Aug 2020 02:31 PM
Last Updated : 13 Aug 2020 02:31 PM

சுதந்திர தினத்தன்று சத்திய மூர்த்தி பவனில் கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட கொடியேற்றம்: கே.எஸ்.அழகிரி அழைப்பு

சுதந்திர தினம் மற்றும் காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில், 40/30 அடி பிரம்மாண்ட கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ். அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை

“1757 இல் நடந்த பிளாசி யுத்தத்தின் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து 100 ஆண்டுகள் கழித்து 1857 இல் முதல் இந்திய சுதந்திர போர் வெடித்தது. இனி ஆயுதப் புரட்சி நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மக்களின் குறைகளை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உணர்த்த 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானது.

தொடக்கத்தில் மிதவாத போக்குடன் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், 1920 க்கு பிறகு மகாத்மா காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், இறுதியாக 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தி அகிம்சை வழியில் 1947 இல் சுதந்திரம் பெற்றோம். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்று நவஇந்தியாவை உருவாக்கினார்.

இந்தியா சுதந்திரம் பெற்று வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 வது சுதந்திர தினத்தையும், சுதந்திரத்தை பெற்றுத் தந்த மகாத்மா காந்தி அவர்களின் 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவையும் இணைத்துக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காலை 10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, சேவாதளத்தினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி அவர்களின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசப்பிதாவிற்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றுகிற நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில், தேசிய கொடியை நான் ஏற்றிய பிறகு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைக்கிற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கிற வகையில் சர்வதேச தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 150 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏற்றப்படுகிற காங்கிரஸ் கொடியின் அளவு 45 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட பிரமாண்டமானதாகும். உலகத்தில் எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இவ்வளவு பெரிய கொடி அமைத்ததில்லை என்கிற கின்னஸ் சாதனையை இது படைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரஸின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றுகிற வகையில் 150 அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கவிருக்கிறது.

காங்கிரஸ் மூவர்ண கொடி குறித்து நாமக்கல் கவிஞர் பாடும் போது, 'சாதி பேத தீமையை சாம்பலாக்கும் கொடியிது! நீதியான எதையுமே நின்று காக்கும் கொடியிது' என்று அர்த்தம் பொதிந்த கருத்துக்களை கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு எத்தனை கொடியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் கொடியில் இருக்கிற வண்ண தோற்றப் பொலிவைப் போல எந்தக் கொடிக்கும் இல்லையென்று பெருமையாகக் கூற முடியும். கைராட்டை பொறித்த இந்த மூவர்ண கொடியின் கீழ் தான் காந்தியடிகளின் தலைமையில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தோம்.

எனவே, ஆகஸ்ட் 15 அன்று காலையில் நடைபெறுகிற சுதந்திர தின விழாவில் தேசிய கொடி மற்றும் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியேற்றுகிற விழாவிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

காங்கிரஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைக்கப் போகும் இந்த எழுச்சிமிகு விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x