

பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக.13) வெளியிட்ட அறிவிப்பு:
"தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22-ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கரோனா தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க பொது விழாக்களைத் தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பண்டிகை கொண்டாடத் தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, உரிய தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.