

இணையம் மூலம் ஆவணங்களைப் பெறுவது தொடர்பான வழிமுறைகளை அறியாத அப்பாவிப் பழங்குடி மக்கள், அரசின் நல உதவிகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரம் பர்கூர் மலைப் பகுதியின் பர்கூர் ஊராட்சியில் 33 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் லிங்காயத்து மற்றும் ஊராளி இன மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். வேளாண்மையும், வனப்பொருள் சேகரிப்பும்தான் இவர்களின் வாழ்வாதாரம். வானம் பார்த்த பூமி என்பதால் பெரும்பாலும் இங்கு சிறு தானியங்களே சாகுபடி செய்யப்படுகின்றன. ஆகவே, வருடத்தின் பாதி நாட்கள் இந்த மக்கள் சமவெளிப் பகுதிகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராமலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் கிடைக்காமலும் இப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்துத் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் சத்தியமங்கலம் ‘சுடர்’ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒன்னகரை, தம்புரெட்டி, ஓசூர், ஆலணை, கோயில் நத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வந்தன.
இதைப் பற்றி நாம் ஏற்கெனவே 'இந்து தமிழ்' இணையத்தில் செய்திகள் வெளியிட்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக வெவ்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பாகச் செய்திகள் வந்ததையடுத்து, இதுகுறித்த ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உயர் நீதிமன்றம். இதற்கான ஏற்பாடுகளை அரசு எந்த அளவு செய்திருக்கிறது என்பது இன்னமும் அறியப்படாத நிலையில், பர்கூர் மலைப் பகுதியில் மட்டும் எத்தனை பேருக்கு ஆவணங்கள் இல்லை என்பது குறித்த ஆய்வுகளைச் செய்து முடித்துள்ளது பழங்குடியினர் சங்கம் மற்றும் சுடர் தன்னார்வ அமைப்பு.
இது தொடர்பான புள்ளிவிவரங்களை மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயனிடம் இவ்வமைப்பினர் வழங்கியிருந்தனர். அந்தியூர் வட்டார வழங்கல் அலுவலரிடம் இந்தப் புள்ளிவிவரங்களை ஒப்படைத்திருக்கும் கே.சுப்பராயன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கிடையே, ஆவணங்கள் இல்லாததால் நிவாரணப் பொருட்களைப் பெற முடியாமல் தவிக்கும் பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த 360 குடும்பங்களுக்குச் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்களை வழங்கியது ‘சுடர்’ தொண்டு நிறுவனம். இப்பணிகளை இன்று காலை கொங்காடை அருகில் உள்ள ஓசூர் பழங்குடியினர் குடியிருப்பில் தொடங்கிவைத்தார் கே.சுப்பராயன்.
இதுகுறித்துப் பேசிய அவர், “தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாத அப்பாவி மக்கள் இங்கே வசிக்கிறார்கள். இந்த நாட்டில் எந்தக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. இந்த அப்பாவி மக்களுக்கு இணையத்தில் ஆவணங்களைப் பெறுவது பற்றியெல்லாம் எப்படித் தெரியும்? இதன் காரணமாக ஆவணங்கள் இல்லாமலே இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது நியாயமா?
அரசு அதிகாரிகள் இப்படிப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சரியல்ல. யார் யாருக்கு என்னென்ன ஆவணங்கள் இல்லையோ, என்னென்ன திட்டங்கள் அமலாகவில்லையோ அதையெல்லாம் உடனே அரசு வழங்கியாக வேண்டும். இரண்டொரு மாதங்களில் இது நடைபெறவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன்” என்று தெரிவித்தார்.