ஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்   

ரவிக்குமார் எம்.பி: கோப்புப்படம்
ரவிக்குமார் எம்.பி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை குறைந்தபட்சம் 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஆக.13) எழுதிய கடிதம்:

"நமது நாட்டில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குநர் அளித்த தகவலின்படி, அங்கே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 250 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த தொற்றாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இக்காரணத்தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது.

உடனடியாக, ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1,000 பரிசோதனைகள் செய்யும் விதமாக அதைத் தரம் உயர்த்தித் தரவேண்டும்".

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in