போதைப்பொருள் கடத்தலில் கைதான பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு

போதைப்பொருள் கடத்தலில் கைதான பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு
Updated on
1 min read

திருச்சி மன்னார்புரம் பகுதியில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் நடமாடுவதாக திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (ஓசிஐயூ) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓசிஐயூ டிஎஸ்பி செந்தில்குமார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்ஐபிசிஐடி) டிஎஸ்பி காமராஜ் உள்ளிட்ட போலீஸார் 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் 2 பாட்டில்களில் சுமார் 2 கிலோ எடையுள்ள ஓபியம் என்ற போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த அடைக்கலராஜ்(43), ஜெயப்பிரகாஷ்(40), ஆறுமுகம்(63), பாலசுப்பிரமணியன்(45), திருச்சி மாவட்டம் மான்பிடிமங்கலத்தைச் சேர்ந்த அத்தடையன்(40) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அதில் இக்கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்ட அடைக்கலராஜ், பெரம்பலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர் என்பதும் தற்போது மாவட்ட துணைத் தலைவராகவும், பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் உள்ளிட்ட 5 பேரும் ஜே.எம்-2 நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கும்பல் போதைப்பொருளை மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவருக்கு கொடுப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் காரில் காத்திருந்தது தெரியவந்தது. அந்த முக்கிய பிரமுகர் குறித்தும் எங்கிருந்து போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தன்மையை ஆராய, அதை சென்னையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கட்சியில் இருந்து நீக்கம்

இதுகுறித்து, பெரம்பலூர் வந்திருந்த பாஜக மாநில தலைவர் முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்" என்று அவர் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in