Published : 13 Aug 2020 07:57 AM
Last Updated : 13 Aug 2020 07:57 AM

20 நாட்களாகியும் கரை திரும்பவில்லை; மீனவர்களை மீட்க கோரி காசிமேட்டில் சாலை மறியல்: நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று20 நாட்களுக்கு மேல் ஆகியும் கரை திரும்பாததால், மாயமான 10 மீனவர்களை மீட்கக் கோரி காசிமேட்டில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை காசிமேடு, ஏ.ஜெ. காலனி, 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (39). இவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்தமாதம் 22-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தேசப்பன், பார்த்திபன், பாபு, சிவக்குமார் உட்பட 10 மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும், அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதனால் அச்சம் அடைந்த 10பேரின் உறவினர்கள், மீனவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதையடுத்து மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய போலீஸார் கடலோர காவல் படையினர் உதவியுடன் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாயமான மீனவர்களை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி நேற்று, காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையம் எதிரில், 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்ததின் பேரில், மறியல் கைவிடப்பட்டது.

முன்னதாக, அமைச்சர் ஜெயக் குமாரும் மீனவர்களை சந்தித்து மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x