கட்டணத்தை உயர்த்த தயங்கும் ஆம்னி பஸ்கள்: போக்குவரத்து துறை எச்சரிக்கை எதிரொலி

கட்டணத்தை உயர்த்த தயங்கும் ஆம்னி பஸ்கள்: போக்குவரத்து துறை எச்சரிக்கை எதிரொலி
Updated on
1 min read

தமிழகத்தில் மே 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டும் பெரும்பாலான ஆம்னி பஸ்களில் அதை நடைமுறைப்படுத்தவில்லை. போக்கு வரத்துத்துறை எச்சரிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டுமே சுமார் 700 பஸ்கள் தினமும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப் படுகின்றன. டீசல், டயர் விலை உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு ஆகியவற்றை காரணமாக வைத்து தமிழகத்தில் பயணிகள் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, மே1-ம் தேதி முதல் சாய்வு வசதி கொண்டசொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ.40, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ.70 உயர்த்தப்படும் என அறிவித்தனர். இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால், பெரும்பாலான ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை இன்னும் அமல்படுத்தவில்லை. பழைய கட்டணத்தையே வசூ லிக்கின்றனர். ஒரு சில பஸ் களில் மட்டுமே 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக கூறப் படுகிறது.

அரசு எச்சரிக்கை

ஆம்னி பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் போக்குவரத் துத்துறை ஆணையரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆய்வு நடத்தும்போது கட்டண உயர்வு கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இதுதொடர்பாக போக்கு வரத்துத்துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கட்டண உயர்வு பற்றி எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. மக்களை பாதிக்கும் வகையில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்துவது சரியல்ல. இது தொடர்பாக மக்களிடமிருந்து புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். மேலும், அதிகாரிகள் ஆய்வு நடத்தும்போது, கட்டண உயர்வு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

தமிழக ஆம்னி பஸ் உரிமை யாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘டீசல், உதிரி பாகம், டயர் விலை உயர்வு, காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. எனவேதான் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளோம். இதை சிலர் பின்பற்றாமல் இருக்கலாம்’’ என்றார்.

அரசின் எச்சரிக்கை காரண மாகவே பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in