Published : 13 Aug 2020 07:45 AM
Last Updated : 13 Aug 2020 07:45 AM

சந்திரயானின் ஆர்பிட்டர் கலம் தெளிவாக எடுத்த நிலவின் ‘சாராபாய்’ பள்ளத்தின் புகைப்படம் வெளியீடு: விக்ரம் சாராபாய் பிறந்தநாளில் இஸ்ரோ கவுரவம்

நிலவில் உள்ள மிகப்பெரிய ‘சாராபாய்’ பள்ளத்தை சந்திரயான்-2 விண்கலம் முப்பரிமாணத்தில் மிகத் தெளிவாக படமெடுத்து அனுப்பியுள்ளது. சாராபாய் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி அனுப்பியது. பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு,
செப்டம்பர் 7-ம் தேதி நிலவை சந்திரயான் விண்கலம் நெருங்கியது. ஆனால், அதன் லேண்டர்கலம், நிலவில் தரையிறங்க
வில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆர்பிட்டர்’, நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆர்பிட்டர் கடந்த ஓராண்டாக நிலவை சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்மூலமாக பல முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் நிலவில் உள்ள ‘சாராபாய்’ பள்ளத்தை சந்திரயான் விண்கலம் புகைப்படங்கள் எடுத்து தற்போது அனுப்பியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருக்கும் ‘டெரைன் மேப்பிங் கேமரா-2’ (டிஎம்சி) மூலம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ‘சாராபாய்’ பள்ளம் கடந்த ஜூலை 30-ம் தேதி படம் பிடிக்கப்பட்டது. இது நிலவின் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றாகும்.
இப்பகுதியில்தான் அமெரிக்காவின் அப்போலோ-17, ரஷ்யாவின் லூனா-21 ஆகிய விண்கலங்கள் தரையிறக்கப்பட்டன. இந்த பள்ளத்துக்கு இந்திய விண்வெளித் துறையின் தந்தையான விஞ்ஞானி விக்ரம் ஏ.சாராபாய் பெயர் 1973-ல் வைக்கப்பட்டது.

1919-ல் பிறந்த சாராபாயின் நூற்றாண்டு விழாவை இஸ்ரோ தற்போது கொண்டாடி வருகிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி (நேற்று) அவரது பிறந்தநாளைமுன்னிட்டு, சந்திரயான்-2 விண்கலம் முப்பரிமாணத்தில் மிகவும் தெளிவாக எடுத்த சாராபாய் பள்ளத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பள்ளம் எரிமலை வெடிப்பால் நிலவில் ஏற்பட்ட தாக்கங்களுக்கு சிறந்த உதாரணமாகும்.
கூடுதல் விவரங்களை இஸ்ரோ இணையதளத்தில் (www.isro.gov.in) அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x