

தமிழக அரசியல் களம் பாஜக திமுக இடையேயான போட்டியாக மாறிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தமிழகபாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் வி.பி.துரைசாமி நேற்று கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டால் சமூகநீதி, அநீதியாக மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். குடிமைப் பணித் தேர்வுகளில் ஓபிசி, எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களைவிட குறைவான கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டால் வெற்றி பெற்றுள்ளனர் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 27 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசும், மற்ற கட்சிகளும் தொடர்ந்த வழக்கில் திமுகவும் தன்னை இணைத்துக்கொண்டது. ஆனால், திமுக மட்டுமே வழக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்ததுபோல விளம்பரம் செய்து வருகிறார்கள்.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு
இடஒதுக்கீடு கொள்கையை பாஜக ஆதரிக்கிறது. அதில் உறுதியாகவும் இருக்கிறது. ஐஐடி, ஐஐஎம், இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை மோடி அரசுதான் அமல்படுத்தியுள்ளது.
குடிமைப் பணித் தேர்வுகளில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் குறைக்கவில்லை. மக்களிடம் திமுக தவறான பிரச்சாரம் செய்து வருகிறது. இனியும் இது எடுபடாது.
கனிமொழி 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் 6 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளேன். விமான நிலையங்களில் எம்.பி.க்களுக்கு மிகவும் மரியாதை அளிப்பார்கள். ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில்தான் பேசுவார்கள். ‘‘நீங்கள் இந்தியரா?’’ என்றெல்லாம் கனிமொழியிடம் சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டிருக்க வாய்ப்புஇல்லை. திமுக கூட்டணிக்கு மக்களவையில் 38 எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் நாடாளுமன்றம் கூடும்போது இப்பிரச்சினையை எழுப்பி இருக்கலாம்.
‘நீங்கள் நல்ல நேரத்தில் நல்ல கட்சியில் சேர்ந்துவிட்டீர்கள்’ என்று திமுகவினர் பலர் என்னிடம் கூறி வருகின்றனர். தமிழக அரசியல் கடந்த வாரம் வரை அதிமுக – திமுக இடையேயான போட்டியாக இருந்தது. திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம் அக்கட்சிக்கு எதிராக திரும்பிய பிறகு, தமிழக அரசியல் பாஜக – திமுக இடையேயான போட்டியாக மாறிவிட்டது.
தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து செல்கிறார்களோ, பாஜக யார் பக்கம் இருக்கிறதோ அந்த கூட்டணியே வெற்றி பெறும். வரும் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவில் இருந்து விலகி பலர் பாஜகவில் இணைவார்கள்.
இவ்வாறு வி.பி.துரைசாமி கூறினார்.