

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழ் செயல்படும் வாகன நிறுத்தங்களை மீண்டும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, பயணிகள் வீடுகளில் இருந்து, தங்களது இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஆலந்தூர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் உட்பட 23 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்தும் இடவசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கால் மெட்ரோ ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.