Published : 13 Aug 2020 07:23 AM
Last Updated : 13 Aug 2020 07:23 AM

எதிரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம்; முதல்வர் வேட்பாளர் குறித்து பேசுவது அதிமுகவை பலவீனப்படுத்தும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுறுத்தல்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து இந்த நேரத்தில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்தும். தேர்தல் நேரத்தில் கட்சி, முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்என்பதில் அக்கட்சியின் அமைச்சர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்செல்லூர் ராஜு, ‘‘தேர்தல் முடிந்ததும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவை கட்சித்தலைவர் யார் என்பதை முடிவெடுப்பார்கள். அவர்தான் முதல்வர்’’ என்றார்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ‘‘முதல்வராக பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,‘‘கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தல் என 3 தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் மக்கள் இதைத்தான் விரும்புகின்றனர். முதல்வராக பழனிசாமியையும், துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தைச் சந்தித்து அதிக தொகுதிகளில் வெற்றியைப் பெற்றோம். அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துதான் ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது’’ என்றார்.

இந்நிலையில் அமைச்சர்ஜெயக்குமாரிடம் இது தொடர் பாக செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘தேர்தலின் போது கட்சி எடுக்க வேண்டிய முடிவு இது. இந்த நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவிப்பது ஆரோக்கிய மானதல்ல. அதிமுக தொண்டர்கள் விரும்புவது எம்ஜிஆர், ஜெய லலிதா ஆட்சியைத்தான். அது மீண்டும் மலர வேண்டும் என்பது தான் ஒரே இலக்கு. இதை நோக்கித்தான் பயணிக்கிறோம்.

இந்த நேரத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் என்பதால் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல்இருப்பது நல்லது. தனிமனிதர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்கக்கூடாது. இந்தநேரத்தில் எதிரிகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். யார் முதல்வர் என்பதை அந்த நேரத்தில் கட்சி முடிவெடுக்கும். அதிமுகவில் எந்த பிளவும், பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

இந்நிலையில் அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அமைச்சர்கள் கருத்து குறித்துகூறும்போது, ‘‘அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் முடிந்த பின் முதல்வர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற நடைமுறையை கூறியுள்ளார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர் விருப்பத்தை கூறியுள்ளார். முதல்வர் யார் என்பதை கட்சியின் தலைமை, நிர்வாகிகள் முடிவெடுத்து அறிவிப்பார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x