Published : 13 Aug 2020 07:16 AM
Last Updated : 13 Aug 2020 07:16 AM

சென்னையில் கரோனா தொற்று சிகிச்சை பெறுவோர் 10 சதவீதமாக குறைவு

சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்றால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றால் சென்னை மாநகராட்சியில்தான் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து54 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 97,574 பேர் (88%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 2,350 பேர் (2.12%) உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,130 ஆக அதாவது 10 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை 7 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 12 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது. அங்கு 11-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 1,717 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,353 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 1,174 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட மண்டலமாக மணலி உள்ளது. அங்கு தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் இம்மண்டலம் கரோனா பாதிப்பு இல்லாத மண்டலமாக மாற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x