Last Updated : 12 Aug, 2020 09:11 PM

 

Published : 12 Aug 2020 09:11 PM
Last Updated : 12 Aug 2020 09:11 PM

குற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்

தென்காசி 

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணமடைந்தார்.

குற்றாலத்தில் சாரல் சீஸன் களைகட்டியுள்ளது. கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஐந்தருவி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஐந்தருவி அருகே உள்ள தோட்டங்களில் ஒன்றை யானை சுற்றித் திரிகிறது. இதைப் பார்த்த விவசாயிகள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் 8 பேர் அப்பகுதியில் முகாமிட்டு, யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அந்த யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலையில் யானை மீட்டும் அப்பகுதிக்கு வந்தது. இதைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் தீப்பந்தங்களை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை மிரளாமல் வனத்துறையினரை விரட்டியது.

இதில், நன்னகரத்தைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர் முத்துராஜ் (57) என்பவர், யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை யானை மிதித்துக் கொன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் தப்பியோடினர்.

யானை அங்கேயே சுற்றித் திரிவதால், உயிரிழந்த முத்துராஜ் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x