

இந்தியாவில் கடந்த 2015-2018 வரையிலான காலக்கட்டத்தில் 373 யானைகள் மின்சாரம், ரயில் விபத்துகள், விஷம் வைத்தல் போன்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளதாக மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் தெரிவித்தார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம் இணைந்து, பெருகிவரும் மனித- யானை மோதல்கள்: சங்க காலம் முதல் தற்போது வரை உள்ள புரிதல்கள் என்ற தலைப்பில் மெய்நிகர் குழு விவாதத்தை நடத்தின. இது தொடர்பாக மதிவாணன் கூறியதாவது:
இவ்வுலகில் கூர்மையான அறிவு கொண்ட விலங்குகளில் யானையும் ஒன்று. பெருங்கற்காலம் முதலே யானைகளும் மனிதர்களும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் 50-க்கும் மேற்பட்ட பெயர்கள் யானைகளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவில் பல பேரரசுகள் உருவாகி இருக்க முடியாது.
பொழுதுபோக்கிற்காக யானை பந்தயங்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட உயிரினங்களில் யானை முதன்மையானது.
இருந்தபோதிலும் சங்ககாலம் தொட்டு இந்நாள் வரையிலும் போர்கள், சாகச வேட்டைகள், மின்சார விபத்துகள், ரயில் விபத்துகள், விஷம் வைத்தல் என்று பல்வேறு வகைகளில் யானைகள் உயிரிழப்பை சந்திக்கின்றன.
யானைகள் சமூகமாக இணைந்து வாழ்வதோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று இறுகிய பிணைப்புடன் வாழும் உயிரினம். இவை வாழ்வதற்கு பரந்த காடுகள் அவசியம்.
அதிகரித்துவரும் வளர்ச்சி திட்டங்கள் யானைகளின் பாரம்பரிய வலசை பாதைகளை துண்டாக்குகிறது. காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய நிலங்களின் பயன்பாடு பயிர்கள், தோட்டங்கள், குவாரிகள், வீடுகள் என வேகமாக மாற்றமடைந்து வருகின்ற காரணத்தால் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2015-2018 காலகட்டத்தில் 373 யானைகள் மின்சார, ரயில் விபத்துகள், விஷம் வைத்தல் போன்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளன.
அதே காலக்கட்டத்தில் யானைகளால் 1713 மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல்களை குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த வெண்டும் என்று அவர் தெரிவித்தார்.