

கரோனா தொற்று நோய்க்கு உயிரிழப்பு விகிதம், சென்னைக்கு அடுத்து மதுரையில் அதிகமாக நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்று நோய்க்கு 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 297 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 11,028 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்த கரோனா நோயாளிகளில் மதுரை மாநகராட்சியில் மட்டுமே 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இந்தத் தொற்று நோய்ப் பரவல் விகிதம் அதிகமாக இருந்தாலும் தற்போது மதுரையில் தொற்று ஏற்படுவோரை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகத்துள்ளனர்.
ஆனாலும், மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் கரோனா தொற்று நோய்க்கு உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை.
அங்கு, நேற்று நிலவரம் அடிப்படையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 97 ஆயிரத்து 574 பேர் குணமடைந்தநிலையில் 2, 350 பேர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 316 பேரும், திருவள்ளூரில் 298 பேரும் இந்த தொற்று நோய்க்கு உயிரிழந்துள்ளனர். மதுரையில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை குறைவு. ஆனால், உயிரிழப்பு விகிதத்தை ஒப்பிட்டால் சென்னைக்கு அடுத்து மதுரையிலே அதிகமாக இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 18,735 பேர் பாதிக்கப்பட்டதில் 316 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 17,706 பேர் பாதிக்கப்பட்டதில் 298 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், மதுரையில் 12,195 பேர் பாதிக்கப்பட்டத்தில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் (மொத்த பாதிப்பு 12,470 பேர்) 157 பேர் மட்டுமே கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘தற்போது மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் கரோனாவுக்கு மிகக் குறைவாகவே மரணம் ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் நோயாளிகள் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததாலேயே மரணம் அதிகமாக ஏற்பட்டது. பொதுவாக இந்தநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் 98 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய், சிறுநீக கோளாறு போன்ற பல பக்க நோய்கள் இருக்கின்றன.
அவர்கள் தாமதமாக சிகிச்சைக்கு வரும்போது சில சமயங்களில், அந்த பக்க நோய்களால் துரதிஷ்டவசமாக மரணம் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் மரணத்திற்கு கரோனா பாதிப்பு மட்டுமே காரணமாக கூறிவிட முடியாது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையினர் அனைவருமே அவர்கள் உயிரைப் பணையம் வைத்துதான் ஒவ்வொரு நோயாளிகள் உயிரையும் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்’’ என்றார்.