இ-பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் நூதனப் போராட்டம்
ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வாகனங்களை இயக்க வழியில்லாமல் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், இ-பாஸ் முறையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.
வெறிச்சோடிக் கிடக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு நிற கயிறுகளைத் தூக்கிட்டதுபோல் கழுத்தில் மாற்றிக் கொண்ட ஓட்டுநர்கள், "வாகனங்களுக்கான கடன் தவணை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடன் தவணை நிலுவைக்காக விதிக்கப்பட்டுள்ள வட்டியை ரத்து செய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனச் சான்றுகளைப் புதுப்பிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டும். வாகனக் கடன் தவணையைச் செலுத்த நிர்பந்திக்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களைக் காப்பாற்ற வேண்டும்.
வாகன ஓட்டுநர்களுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். வாகன ஓட்டுநர்களுக்குக் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து கரோனா பேரிடர் கால நிவாரணம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
முன்னதாக, போராட்டம் குறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.சபரிநாதன், மாவட்டத் தலைவர் டபிள்யு.டென்னிஸ் எட்வின், மாவட்டச் செயலாளர் எஸ்.முகம்மது ரிஸ்வான் ஆகியோர், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
''ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பஸ், லாரி, வேன், கார், ஆட்டோ என அனைத்து வகை வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பம் நடத்த வழியின்றி தமிழ்நாட்டில் இதுவரை ஓட்டுநர்கள் 60 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 5 மாதங்களாக வாகனங்கள் ஓடாத நிலையில் வரி செலுத்தவும், காலத்தில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதேபோல், பல்வேறு நிதி நிறுவனங்கள் கடன் மாதத் தவணைச் செலுத்துமாறு நிர்பந்தம் செய்வதுடன், நிலுவைத் தொகைக்கு அபராதம் விதிக்கின்றன. பலமுறை மனு அளித்தும் நிவாரணம் வழங்கவோ, எங்களைக் காப்பாற்றவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு எங்களைக் கைவிட்டதால் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்" என்றனர்.
இதேபோல், அக்னிச்சிறகுகள் ஓட்டுநர் நலச் சங்கத்தினரும் மாவட்டத் தலைவர் சிராஜூதீன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
