

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் பூர்வீக இந்திய தமிழ்ப் பெண் கமலா ஹாரீஸுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார்.
கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.
அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டார்.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.
பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன் (கமலா ஹாரிஸின் தாயார்). டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.
இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தார்.
தமிழ் பாரம்பரியத்தையும், இந்தியக் கலாச்சாரத்தையும் மறக்கக்கூடாது என்பதற்காவே ஷியாமளா கோபாலன், தனது மகளுக்கு கமலா எனப் பெயரிட்டார். இவர்கள் சென்னையை பூர்விக்கமாக கொண்டவர்கள். கமலா ஹாரிசின் தாய் மாமா டெல்லியில் வசிக்கிறார்.
தற்போது துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பால் கமலா ஹாரிஸ் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். அவருக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக எம்பி கனிமொழியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“முதல் இந்திய செனட்டரான கமலா ஹாரிஸ், அவரது தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்க ஜனநாயகக் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டது இது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம், அவரும் மனம் நிறைந்த வாழ்த்துகள்”.
என வாழ்த்தியுள்ளார்.
திமுக எம்பி கனிமொழி, கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என வாழ்த்தியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“அமெரிக்க அரசியல்வாதி கமலா ஹாரீஸ் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அதிபர் வேட்பாளர் ஜோபிடன் அறிவித்துள்ளது மிகவும் பெருமைக்கொள்ளும் ஒரு விஷயம். கமலாஹரிஸ் இந்திய தமிழ் வம்சாவழியைக் கொண்டவர்.
அவர் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வாகிக்கும் திறன் மிக்கவர் என்கிற முறையில், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.