கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு: 2 கைக்குழந்தைகளுடன் 7 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு: 2 கைக்குழந்தைகளுடன் 7 பேர் தீக்குளிக்க முயற்சி
Updated on
1 min read

கந்துவட்டி கொடுமையால் இரண்டு கைக்குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.7 லட்சம் கொடுத்துவிட்டாராம்.

ஆனால், அதற்கு பிறகும் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல், வட்டி பணம் கேட்டு ஜோசப் மிரட்டி வருவதாக ஏரல் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன், தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேருடன் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதனை கண்டு அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் விரைந்து வந்து அவர்களை தடுத்து காப்பாற்றினர்.

பின்னர் 2 கைக்குழந்தைகள் உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in