Published : 12 Aug 2020 04:05 PM
Last Updated : 12 Aug 2020 04:05 PM

இறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம்; ‘சர்வதேச உடல் உறுப்பு தான தினம்’ முதல்வர் வேண்டுகோள்

மூளைத் தண்டுச் சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் நிலவி வரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 13-ஆம் நாள் சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் ((TRANSTAN) என்ற முன்னோடி அமைப்பை 12.12.2014 அன்று அம்மா உருவாக்கினார்கள். அதன் பயனாக, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 1382 கொடையாளர்களிடமிருந்து 8163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

ஏழை எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அரசு, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 12,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது ஆசிய சாதனை புத்தகத்தில் (Asia Book of Records) இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளிலிருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் (3 மாதங்கள், 6 மாதங்கள், 1 ஆண்டு) பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மூளைத் தண்டு மரணத்தின் மூலம் பெறப்படும் உறுப்புகளை வீணாக்காமல் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்த இயலாத உறுப்புகள் தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தேவையுள்ள, மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் விழுக்காடு பிற மாநிலங்களை விடவும், சர்வதேச அளவை விடவும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது.

மூளைத் தண்டுச் சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x