தூத்துக்குடியில் திருநங்கைகளை நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றிய கரோனா ஊரடங்கு: 15 பேர் பயிற்சி பெற்று 'சகி' கலைக்குழுவை உருவாக்கினர்

தூத்துக்குடியில் திருநங்கைகளை நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றிய கரோனா ஊரடங்கு: 15 பேர் பயிற்சி பெற்று 'சகி' கலைக்குழுவை உருவாக்கினர்
Updated on
2 min read

கரோனா ஊரடங்கு தூத்துக்குடியில் திருநங்கைகளை நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றியிருக்கிறது. 15 திருநங்கைகள் இணைந்து நாட்டுப்புறக் கலைகளை கற்று 'சகி' என்ற பெயரில் கலைக்குழுவை தொடங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கால் கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதேநேரத்தில் பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுப்புறக்கலை:

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகளை ஊரடங்கு நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக வேலைவாய்ப்பு, வருமானம் இல்லாமல் தவித்த திருநங்கைகள், ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற எண்ணி நாட்டுப்புறக் கலைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.

15 திருநங்கைகள் இணைந்து பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை கற்று வருகின்றனர். மேலும் 'சகி' என்ற பெயரில் கலைக்குழுவையும் உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் இரண்டாவது திருநங்கை வழக்கறிஞரான எஸ்.விஜி தான் திருநங்கைகளின் கலைப்பயணத்துக்கு அடித்தளமிட்டது. அன்பு டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் விஜி கூறியதாவது:

கலைக்குழு தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. தூத்துக்குடியில் சகா கலைக்குழுவை நடத்தி வரும் வஉசி கல்லூரி வரலற்றுத்துறை உதவி பேராசிரியர் சங்கரிடம் எனது ஆசையைத் தெரிவித்தேன். அவரும் திருநங்கைகளுக்கு நாட்டுப்புறக் கலைகளை கற்றுக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

திருங்கைகள் கலைக்குழு :

தூத்துக்குடியில் சுமார் 400 திருநங்கைகள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக கலை ஆர்வம் கொண்ட 15 திருநங்கைகளை மட்டும் தேர்வு செய்தோம். அவர்களுக்கு கடந்த 15 நாட்களாக பேராசிரியர் சங்கர் பயிற்சி கொடுத்து வருகிறார். பறையாட்டத்தை முழுமையாக கற்றுவிட்டனர். தொடர்ந்து ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகளையும் ஆர்வமாக கற்று வருகின்றனர். தற்போது கலைநிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு தேறிவிட்டனர்.

பயிற்சி பெற்ற 15 திருநங்கைகளையும் கொண்டு ‘சகி' என்ற பெயரில் கலைக்குழுவை உருவாக்கியுள்ளோம். முதல் முயற்சியாக கரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் பதிவிட்டுள்ளோம்.

அதற்கு கிடைத்த நல்ல வரவேற்பு எங்களுக்கு ஊக்கத்தைத் தந்துள்ளது. தற்போது பல திருநங்கைகள் எங்கள் குழுவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

திருநங்கைகள் என்றாலே யாசகம் மற்றும் பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற நிலையை இந்த கலைக்குழு மாற்றி
அவர்களுக்கு சமுதாயத்தில் கவுரவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அரசு விழாக்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எங்களது கலைக்குழுவை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேண்டுகோள் விடுக்க இருக்கிறோம் என்றார்.

வாய்ப்பளிக்க வேண்டும் :

திருநங்கைகளை நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றிய உதவி பேராசிரியர் மா.சங்கர் கூறியதாவது:

திருநங்கைகள் மிகவும் எளிதாக நாட்டுப்புறக் கலைகளை கற்றுக் கொண்டனர். 10 நாட்களில் பறையாட்டத்தில் தேர்ச்சி பெற்று விட்டனர். மற்ற கலைகளையும் ஆர்வமாக கற்று வருகின்றனர்.

இந்த கலைக்குழுவில் இருப்பவர்களில் 4 பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இதன் மூலம் நாட்டுப்புறக் கலை வளர்வதுடன் திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இதுபோல் மாற்றுத்திறனாளிகளை கொண்ட ஒரு கலைக்குழுவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in