பொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரன்டிஸ் முடித்தவர்களுக்கு பணி கிடைக்க தடையாக இருப்பது எது?- அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆக்ரோஷமாக பேசிய இளைஞர்

பொன்மலை ரயில்வே பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆக்ரோஷமாக பேசிய இளைஞர்.
பொன்மலை ரயில்வே பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆக்ரோஷமாக பேசிய இளைஞர்.
Updated on
1 min read

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில்நுட்ப பிரிவில் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இதைக்கண்டித்து, திருச்சிதெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று முன்தினம் பொன்மலை பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், சில இளைஞர்கள் ஆக்ரோஷமாக பேசினர்.

அவர்களில் ஜான் பிரின்ஸ் என்பவர் பேசும்போது, “இங்கு அப்ரன்டிஸ் முடித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ரயில்வே நிர்வாகம் எங்களுக்கு வேலை தர தயாராக உள்ளது. ஆனால், எங்களுக்கு வேலை தர தடையாக இருப்பது உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குதான். இந்த வழக்கை ரத்து செய்தாலே, எங்களுக்கு வேலை கிடைத்துவிடும்” என்றார்.

இதுகுறித்து ஜான் பிரின்ஸிடம் கேட்டபோது, “அப்ரன்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை கிடைக்க ரயில்வேயில் புதிய கொள்கை வரையறை செய்ய வேண்டும். எம்பி-க்கள் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே நடக்கும் என்பதால் எம்பி-க்கள் திருநாவுக்கரசர், திருமாவளவன், செல்லக்குமார் ஆகியோரிடம் ஆதரவுக் கடிதம் பெற்றுள்ளோம். திமுகவைச் சேர்ந்த 30 எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை பெற்றுத்தருமாறு எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” என்றார்.

இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, “ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் யாரும் திமுகவுக்கு எதிராக பேசவில்லை. உதவி வேண்டும் என்றுதான் கேட்டனர். அப்ரன்டிஸ் முடித்தவர்களுக்கு பணி கிடைக்க தடையாக உள்ள வழக்கை முடித்துத் தர உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்தும், இவர்களின் கோரிக்கைக்களுக்கான எம்பிக்க ளின் ஆதரவு கடிதம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசிக்க உள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in