Published : 12 Aug 2020 08:03 AM
Last Updated : 12 Aug 2020 08:03 AM

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரிமோட் உதவியுடன் இயங்கும் துப்பாக்கி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ரிமோட் உதவியுடன் இயங்கும், நிலைப்படுத்தப்பட்ட தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கி.

திருச்சி

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரிமோட் உதவியுடன் இயங்கும், நிலைப்படுத்தப்பட்ட தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கியை (Stabilized Remote Controlled Gun) மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக அறிமுகப்படுத்தினார்.

திருச்சி நவல்பட்டு பகுதியில் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவம், துணை ராணுவம்மற்றும் பல்வேறு மாநில போலீஸாருக்கு தேவையான துப்பாக்கிஉள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம்ஸ் என்றநிறுவனத்துடன் செய்யப்பட்ட தொழில்நுட்ப பகிர்வு ஒப்பந்தத்தின்படி ரிமோட் உதவியுடன் இயங்கும், நிலைப்படுத்தப்பட்ட தொலைகட்டுப்பாட்டு துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி 12.7 எம்.எம். M2 நேட்டோ (NATO) வகையைச் சேர்ந்தது. கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த துப்பாக்கியை கப்பல்கள், சிறிய, பெரிய படகுகள் ஆகியவற்றிலும் பொருத்தலாம். ரிமோட் மூலம் இரவிலும், பகலிலும் இயங்கும் இந்த துப்பாக்கி தானாக இலக்கை தேடும் வசதி, எதிர்பாராத மின்தடை அல்லது தானியங்கி முறை பழுதடைந்தாலும் கூட கையால் இயக்கக் கூடிய வசதியும் உள்ளது.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் பாகங்களை இணைத்தல் மற்றும் சோதனை இயக்கம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்காக இந்தியாவிலேயே இந்த துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், ஏறத்தாழ ரூ.167 கோடி சேமிக்கப்படும்.

இந்த துப்பாக்கி தயாரிப்பால் இத்தொழிற்சாலையில் இருந்துசக படைக்கலன் தொழிற்சாலைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்.

அறிமுக நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை உற்பத்தி செயலாளர் ஸ்ரீபத் யசோ நாயக், படைக்கலத் தொழிற்சாலை வாரியத் தலைவர் ராஜ்குமார், வாரிய அலுவலர் ஹரிமோகன், வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பொது மேலாளர் ஹரிஷ் கரே உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x