

சென்னை விமான நிலையத்தில் மனம் புண்படும்படி பேசிய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி புகார் கொடுக்காதது ஏன் என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மத்தியில் 15 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் தமிழ் தெரியுமா? ஆட்சியில் இருந்தபோது தமிழ் கண்களை மறைத்த இந்தி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ் கண்
களை திறக்கிறதோ? ஆட்சியில் இருந்தபோது கனிமொழிக்கு கனிவாக இருந்த இந்தி, எதிர்க்கட்சியாக உள்ளபோது கனலாக காய்கிறதோ?
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. ஆனால், 2010-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்தி தேசிய மொழி என்று கூறியதை கனிமொழி எதிர்த்தாரா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாட திட்டத்தை விட்டு, மாநில பாட திட்டத்தை பயிற்றுவிப்பார்களா? ஏழை மாணவர்கள் மூன்றாவது மொழி கற்கக்கூடாது. பணம் படைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம்.
நாடாளுமன்ற உறுப்பினரின் மனம் புண்படும்படி சிஐஎஸ்எப் அதிகாரி பேசியிருந்தால் உடனடியாக புகார் கொடுக்காமல், ட்விட்டரில் பதிவு செய்தது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.