

மணலி சரக்குப் பெட்டக முனையத்தில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த மேலும் 12 கன்டெய்னர்கள் ஐதராபாத் நகருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 138 பேர் உயிரிழந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டு, மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டால் விபத்து ஏற்படும் அபாயம்இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்த அமோனியம் நைட்ரேட் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுங்கத் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை ஏலம்விட்டது. ஐதராபாத்தில் உள்ளசால்வோ கெமிக்கல்ஸ் அண்ட் எக்ஸ்புளோசிவ் என்ற தனியார் நிறுவனம் இதை ஏலம் எடுத்தது.
இதையடுத்து, மணலியில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த 37 கன்டெய்னர்களில், 181 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டைக் கொண்ட 10 கன்டெய்னர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் 12 கன்டெய்னர்களில் 229 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள கன்டெய்னர்கள் இன்றுஅனுப்பி வைக்கப்பட உள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.