

இளையனார்குப்பம் - புதுப்பட்டினம் இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலையில் வாகன விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதால், குறுகிய வளைவற்ற சாலையாகவும் சென்டர் மீடியன்களை உயர்த்தி அமைக்கவும் வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்பாக்கம் அருகே உள்ள இளையனார்குப்பம் மற்றும் புதுப்பட்டினம் இடையே அமைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில், புதிதாக 1.7 கி.மீ. தொலைவு கொண்ட புறவழிச்சாலை அமைக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக, இளையனார் குப்பத்தில் ஈசிஆரின் நடுவே புதிய மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதன்பேரில், 4 வழிச்சாலைக்கான மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலேயே அச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புறவழிச் சாலையில் செல்வதற்காக வாகனங்கள் திரும்பும் பகுதி குறுகிய வளைவுடன் அமைந்துள்ளதாக தெரிகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
மேலும், இச்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் சுமார் 1 அடி உயரமே இருப்பதால், வாகனங்கள் திரும்பும்போது சென்டர் மீடியனில் ஏறி விபத்தில் சிக்குகின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் நூருல்லா கூறும்போது, “புறவழிச்சாலை பணியில் சரியான திட்டமிடல் இல்லாததால் அதிகவாகன விபத்துகள் நடைபெறுகின்றன.
புதிய சாலையின் திருப்பத்தில் கனரக வாகனங்கள் அதிகமாக விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால், வளைவு பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மேலும், சென்டர் மீடியனை 3 அடி உயரத்துக்கு அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்” என்றார்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “இளையனார் குப்பம், புதுப்பட்டினம் இடையே அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை ஆய்வு செய்து, வாகன விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.