

சென்னையில் கடந்த சில மாதங்களாக கும்பல் ஒன்று போலியான கால் சென்டர் அமைத்து, காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட 121 பேர் 68 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பறிகொடுத்துள்ளதாக காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்ததை கண்டறிந்து அதற்கு சீல் வைத்தனர்.
இனி இதுபோல் வரும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம். உடனடியாக இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலி கால் சென்டர் மூலம் பணமோசடி செய்ததாக இந்த ஆண்டில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.