Last Updated : 12 Aug, 2020 07:31 AM

 

Published : 12 Aug 2020 07:31 AM
Last Updated : 12 Aug 2020 07:31 AM

பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து அங்கீகாரமற்ற விதைகள் வந்துள்ளனவா?- தமிழகம் முழுவதும் விதைகள் விற்பனையை கண்காணிக்கும் பணி தீவிரம்

பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் வகையில் அங்கீகாரமற்ற விதைகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் விதை விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியம், பல்லுயிர் பெருக்கம் போன்றவற்றுக்கு ஆபத்து விளைவிக்காது என்று உறுதி செய்யப்படும். அதன் பிறகே விற்பனைக்கோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், அங்கீகாரமற்ற விதைகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பப்படுவதாக வந்த தகவலையடுத்து, மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து விதைச்சான்று மற்றும் அங்கக சான்றழிப்புத் துறை இயக்குநர் எம்.சுப்பையா கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து விதைகள் கணிசமாக இறக்குமதி செய்யப்படாமல் 100 கிராம், 200 கிராம் பாக்கெட்களில் அடைத்து சிறிய பார்சல்களாக அனுப்பப்பட்டால் அவற்றை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும் விதை விற்பனைசெய்யப்படும்போது அவற்றைக் கண்காணிக்கும் வசதி தமிழகத்தில் உள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் பணியில் உள்ள விதை சான்று பிரிவுதுணை இயக்குநரும் விதை ஆய்வாளர்களும் விதை, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதிய விதை விற்பனைக்கு வந்தால் அதன் மாதிரி எடுத்து ஆய்வுசெய்யப்படும். இதற்காக தமிழகம்முழுவதும் 29 பகுப்பாய்வுக் கூடங்கள் உள்ளன. குறிப்பிட்ட தரத்தில் புதிய விதை இல்லாவிட்டால் அதன் விற்பனையை நிறுத்தி வைத்துதுறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமற்ற விதையாக இருந்தால், விதை சட்டம் 1966-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம்நிரூபிக்கப்பட்டால் விற்பனையாளருக்கு குறைந்தபட்சம் ரூ.500 அப ராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்க இச்சட்டத்தில் வழிவகை உள்ளது.

நெல்லை ஆய்வு செய்ய 14 நாட்களும் மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஆய்வு செய்ய 7 நாட்களும் எள்ளுக்கு 5 நாட்கள் வரையிலும் ஆகும். விதையைப் பொறுத்தவரை அதன் ஈரப்பதம், முளைப்புத்திறன், கல், மண், தூசி, கலப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு சுப்பையா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x