

ரஷ்யாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் உடல்கள் 3,4 நாட்களில் தமிழகம் கொண்டுவரப்படும் என ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த, தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவன செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டி.ஆர்.பாலுவுக்கு ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து திமுகவின் செய்திக்குறிப்பு:
“ரஷ்ய நாட்டில் தமிழக மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவைத் தொடர்புகொண்ட ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தினர், இறந்த மாணவர்களுக்கு உடற்கூராய்வு, எம்பாமிங் சான்றிதழ், கோவிட்-19 பரிசோதனை ஆகியவை செய்தபின், விமான சேவையைப் பொறுத்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் இறந்த மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக பதிலளித்துள்ளனர்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.