Last Updated : 11 Aug, 2020 07:38 PM

 

Published : 11 Aug 2020 07:38 PM
Last Updated : 11 Aug 2020 07:38 PM

நைஜீரியாவில் பணியாற்றிய தூத்துக்குடி கப்பல் மாலுமி பலி: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

தூத்துக்குடி

நைஜீரியாவில் இறந்த தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமியின் உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலைச் சேர்ந்தவர் வில்ஜியூஸ் லோபோ. இவர் சேர்ந்தபூமங்கலம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வில்பன் லோபோ (21). இவர் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் எம்.வி. ஹல்விட்டா என்ற கப்பலில் இயந்திரப் பணியாளாராக 9 மாதகாலம் ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த 15.11.2019 அன்று பணியில் சேர்ந்தார்.

சுமார் எட்டரை மாதங்கள் பணி முடிவடைந்த நிலையில், கடந்த 26.07.2020 அன்று இரவு 10.30 மணியளவில் நைஜீரியா நாட்டு கடல் பகுதியில் வில்பன் லோபோ கப்பலில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் மாலுமியின் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க நிர்வாகிகள் மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரை தொடர்பு கொண்டு கடலில் விழுந்த மாலுமியை தேடும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 28.07.2020 அன்று மாலுமி வில்பன் லோபோ உடல் மீட்கப்பட்டதாக கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாலுமிகள் உடல், உடல்கூறாய்வு செய்யப்பட்டு நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, மாலுமியின் உடலை அவரது சொந்த ஊருக்கு விரைவாக கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x