

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் கடந்த சில நாட்களாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலையில் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 2018-ம் ஆண்டு இதேகாலத்தில் 116 அடியாக இருந்தது. 2019-ல் 94.80 அடியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடித்த மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து இன்று காலையில் 100.65 அடியாக உயர்ந்திருந்தது.
அணைக்கு வினாடிக்கு 3036.23 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 804கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 130.90 அடியாகவும், 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.20 அடியாகவும் இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 55 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
நம்பியாறு, வடக்கு பச்சையாறு அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. நம்பியாறு நீர்மட்டம் 10.13 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும் நேற்று காலையில் இருந்தது.