

தன்னுடன் பழகி நகை, பணத்தை பறித்துச் சென்ற பெண் மீது அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிக்க முயன்றார். அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சங்கையா (39) என்பவர் மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில், ஏற்கெனவே திருமணமான மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு சங்கையா வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்துள்ளனர். அந்த பெண்ணின் மீதான நம்பிக்கையில் வங்கி கணக்குகள், நகைகள் ஆகியவற்றை சங்கையா கொடுத்துள்ளார்.
ஒரு நாள் பணம், நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சங்கையாவை ஏமாற்றிவிட்டு தன் கணவருடன் அந்த பெண் சென்றுவிட்டார். தனியாக இருக்கும் ஆண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நகைப்பணத்தை பறிப்பது என்கிற நூதனமான முறையில் மோசடி செய்வதை வழக்கமாக கொண்ட அந்த பெண், தன்னையும் ஏமாற்றியதால், அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், அண்ணாநகர் துணை ஆணையரிடமும் சங்கையா புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அண்ணாநகர் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை (suo-moto) விசாரணைக்கு எடுத்துள்ளது.
சங்கையா அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.