

தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் இணைந்து வைகை ஆற்றின் இரு புறமும் 384 கோடியில் 50 அடி அகலத்திற்கு பிரம்மாண்ட நான்கு வழிச்சாலை அமைத்து வருகின்றன. இந்த சாலையால் நகர்ப்பகுதியில் வைகை ஆறு சுருங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுரையையும், வைகை ஆற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆண்டு முழுவதும் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிய வைகை ஆறு தற்போது நீரோட்டமில்லாமல் நிரந்தர வறட்சிக்கு இலக்காகியுள்ளது.
ஆற்றின் இரு கரைகளிலும் தனியாரின் பிரம்மாண்ட கட்டிட ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆட்சியாளர்கள் கவனக்குறைவால் தற்போது அவர்கள் அந்த ஆக்கிரமிப்பு நிலத்திற்கு நிரந்தர பட்டாவும் வாங்கிவிட்டனர். அதனால், ஒரு காலத்தில் மதுரை நகரில் பிரம்மாண்டமாக ஓடிய வைகை ஆறு தற்போது பல இடங்களில் சுருங்கிப்போய்விட்டது.
மதுரையின் வளர்ச்சிக்காக..
ஆனால், மதுரையின் வளர்ச்சிக்காகவே இந்தப் பாலம் அமைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகரப்பகுதியில் வராமல் கடந்து செல்வதற்கு ரிங் ரோடு, பை-பாஸ் சாலைகள் இருந்தாலும், பரவை, சமயநல்லூர், விளாங்குடி, ஆரப்பாளையம், சோழவந்தான் போன்ற மதுரையின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியில் இருந்து ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தற்போது நகரப்பகுதிக்குள் வந்து செல்கின்றன.
அதுபோல், ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடியிலிருந்து மதுரையின் கிழக்குப்பகுதி வழியாக வரும் வாகனங்கள் நகரப்பகுதயில் வந்தே காளவாசல், பரவை, சமயநல்லூர், சோழவந்தான், விளாங்குடிக்கு செல்கின்றன. அதனால், மதுரை நகரச் சாலைகளில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகிவிட்டது.
இது மதுரையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், நகரப்பகுதிக்குள் வராமல் கிழக்குப்பகுதிக்கு செல்வதற்கு தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை வைகை ஆற்றின் வட கரையில் 8 கி.மீ.,க்கும், தென் கரையில் 8 கி.மீ., தொலைவிற்கும் விளாங்குடி முதல் விரகனூர் வரை ரூ.300 கோடியில் ஆற்றின் பிரமாண்ட நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படுகிறது.
இதில், நகர்ப்பகுதியில் ராஜா மில் பகுதியில் இரந்து குருவிக்காரன்சாலை வரை 3 கி.மீ., தொலைவிற்கு மாநகராட்சி நான்கு வழிச்சாலை அமைக்கிறது. மீதி 9 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை நான்கு வழிச்சாலை சாலை அமைக்கிறது.
மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும் இந்த 2 கி.மீ., தொலைவிற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு வழிச்சாலை சாலைகள், பூங்காக்கள், தடுப்பு சுவர் மற்றும் தடுப்பணைகள் உள்பட ரூ. 84 கோடியில் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை ரூ.300 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கிறது.
நீர்நிலை ஆர்வலர்கள் சொல்வது என்ன?
என்னதான் வளர்ச்சிக்காக இந்த பால நடவடிக்கை என்று சொன்னாலும் ஆற்றங்கரையில் நடக்கும் இந்த மேம்பாட்டுப் பணிகளால் வைகை ஆறு சுமார் 50 அடிக்கு சுருங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெரும் மழை வந்து வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மதுரை நகருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீர்நிலை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ‘‘வைகை ஆற்றங்கரை வழியாக விரகனூர் ரிங் ரோட்டில் இருந்து துவரிமான் அருகே திண்டுக்கல் ரிங் ரோடு வரை பிரம்மாண்ட சாலைகள் அமைக்கப்படுகின்றன.
மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வாகனங்கள் நகருக்குள் வராமல் ஆற்றங்கரையோரமாக போடப்படும் இந்த சாலைகள் வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி கூறுகிறது.
ஆனால், ஆற்றங்கரையோரத்தில் போடப்படும் இந்த சாலையில் பல சில இடங்களில் இணைப்புச் சாலை இல்லாமல் உள்ளது. அதனால், எந்த நோக்கத்திற்காக இவர்கள் சாலை போடுவதாகச் சொல்கிறார்களோ அது இல்லாமல் வாகனங்கள் நகர்ப்பகுதிக்குள் மீண்டும் வந்து செல்லும்.
மீண்டும் போக்குவரத்து நகரப்பகுதியில் தொடரத்தான் வாய்ப்புள்ளது. மதுரை மாநகருக்கு வெளியே வைகை ஆறு இன்னும் அதன் பழைய அளவிலேயே உள்ளது. ஆனால், நகர்ப்பகுதியில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பால் சுருங்கிய வைகை ஆறு தற்போது ஆற்றின் இரு புறமும் சாலை அமைப்பதால் மேலும் சுருங்கிவிட்டது.
தற்போது விரகனூர் ரிங் ரோடு பகுதியில் போடப்பட்ட வைகை ஆறு சாலைப் பணிகள் முடிந்து திறக்க தயார் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த திட்டத்தைத் தொடங்கும்போது வைகை ஆறு 15 அடி மட்டும் சுருங்குவதாக கூறினர்.
ஆனால், தற்போது அதைவிட ஆற்றைச் சுருக்கி பிரம்மாண்டமாக சாலை போட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடந்த 3 ஆண்டிற்கு மீனாட்சியம்மன் கோயில் உள்ளே தண்ணீர் வந்தது. ஆறு சுருங்கியதால் ஆற்றில் வெள்ளம் வந்தால் இனி மதுரை நகருக்குள் புகுந்துவிடும். இது மக்களுக்கு ஆபத்துதான்.
நீர்நிலைகளை சுருக்குவதற்கு மக்களிடம் கருத்து கேட்கவில்லை. தரமில்லாமல் பணிகள் நடக்கின்றன, ’’ என்றார்.
மாநகராட்சி விளக்கம்:
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் கட்டுவதால் கிடைக்கும் இடத்தில்தான் இந்த சாலை 14 மீட்டர் அளவிற்கு சுமார் 50 அடி அளவில் போடப்படுகிறது.
ஆற்றின் பகுதியில் சாலை போடப்படவில்லை. நகர்ப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பதால் வெள்ளம் வந்தாலும் நகர்ப்பகுதியில் தண்ணீர் புகாது, ’’ என்றனர்.