

உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தேவை அதிகரித்து விவசாயிகள் லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் தேயிலை விவசாயம் தான் பிரதானம். மாவட்டத்தில் காய்கறி 7,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. அதில், கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட் மேட்டுப்பாளையம், சென்னை போன்ற மொத்த சந்தைகளுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கேரட் மற்றும் உருளைக்கிழங்கு மூலமே நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில், மழையின்மை மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் கேரட்டுக்கு விலை கிடைக்காத போது, அவை கால்நடைகளுக்குத் தீவனமாகி விடுகின்றன. இதனால், விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட்டை மதிப்பு கூட்டுவது மற்றும் பதப்படுத்துவது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மேலும், தொழில்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
இதற்கு தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 'ஆத்மநிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தின் விளைபொருளாக கேரட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறார், தோடக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ்.
அவர் கூறும் போது, "இத்திட்டம் 2021 ஆண்டு முதல் 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனி நபர் மற்றும் குழுக்கள் பங்குபெறலாம்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஆகவே, மாவட்ட அளவில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதியதாக ஈடுபடவுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெறலாம். இத்திட்டம் மூலம் கேரட்டுகளுக்குத் தேவை அதிகரிக்கும். விவசாயிகள் தங்கள் விளைபொருளை எளிதாக விற்பனை செய்யலாம்" என்றார்.