Last Updated : 11 Aug, 2020 05:00 PM

 

Published : 11 Aug 2020 05:00 PM
Last Updated : 11 Aug 2020 05:00 PM

கரோனா காலத்திலும் தொய்வில்லாமல் சேவைகள்; அரசு மருத்துவமனைகளில் புற நேயாளிகள், பிரசவங்களின் எண்ணிக்கை உயர்வு; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதல்வரின் உத்தரவின் பேரில் கரோனா காலத்திலும் தொய்வில்லாமல் இதர சிறப்பு மருத்துவ சேவைகள் நடைபெறுவதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், உலகளவில் பெருந்தொற்று பரவிய காலத்திலும் தமிழ்நாடு அரசு கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் எவ்வித தங்கு தடையின்றி அவசரகால மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2,183 நபர்கள் புறநோயாளிகளாகவும் 27 லட்சத்து 30 ஆயிரத்து 864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்களும் 68 ஆயிரத்து 479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் (சீமாங்) 1 லட்சத்து 29 ஆயிரத்து 206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

கரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x