

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடப் பொருட்களை இந்தியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை:
"வெளி நாடுகளில் இருந்து ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு, நம்மிடம் அதற்கான தொழில்நுட்பம் இல்லாததே காரணம். இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவித்துள்ளது. ஆனால், இனி அந்தப் பொருட்கள் இந்திய ராணுவத்துக்கு எப்படி கிடைக்கும் என்று தெளிவுபடுத்தவில்லை.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடப் பொருட்களில் புல்லட் புரூப் ஜாக்கெட், பீரங்கி, டாங்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியாவில் உள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளிலேயே உற்பத்தி செய்ய முடியும். ஆவடியில் உள்ள ஓசிஎப் தொழிற்சாலையில் புல்லட் புரூப் ஜாக்கெட் வடிவடைத்து உருவாக்கி தற்போது தமிழ்நாடு உட்பட பல்வேறு காவல் துறையினருக்கும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் உள்ள பாதுகாப்பு தளவாடப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது முறையல்ல. பாதுகாப்புத் துறையில் 74 சதவீதம் நிபந்தனையின்றி அந்நிய நாட்டு மூலதனம் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த தனியார் பெரு நிறுவனங்கள், அந்நிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தியாவில் அந்த தளவாடப் பொருட்களை முழுமையாக உற்பத்தி செய்யாமல், அசெம்பிளி மட்டும் செய்து சுயசார்பு அடைந்துவிட்டோம் என்று அறிவிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பை எட்டும் வகையில், 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், அவற்றை உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளுக்காக மாற்றிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதற்கான போதிய நிதி ஒதுக்கீட்டை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் தனியார் பெரு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எனவே, தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள 101 பாதுகாப்பு தளவாடப் பொருட்களை இந்தியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
மேலும், நாட்டில் உள்ள 52 ராணுவ ஆய்வு நிலையங்கள், 41 பாதுகாப்பு தொழிற்சாலைகள், 9 பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை பலப்படுத்தி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை இணைத்து, இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக ராணுவத் தளவாடப் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.