

மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முதல் முறையாக வீடியோ காணொலிக் காட்சி மூலம் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்றவர்களிடம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு கடிதம் மூலம் குறைகள் பெறப்பட்டு குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் பதிலளிக்கப்படும்.
கரோனா ஊரடங்கு தொடர்வதால் முதல் முறையாக மதுரை மண்டல அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வாடிக்கையாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.
’நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த குறைதீர் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனிலிருந்து சிஸ்கோ வெபெக்ஸ் மீட்டிங் செயலி வழியாக மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் என்.கோபாலகிருஷ்ணனை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
முன்னதாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்காக நேர ஒதுக்கீட்டை பெற்றனர்.
வருங்கால வைப்ப நிதி கணக்கில் சுய விபரங்களில் திருத்தம் செய்வது, கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், சேவைகளை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் உள்ள குறைபாடுகளை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் ஆணையரிடம் தெரிவித்தனர்.
இது குறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க மார்ச் 24 முதல் தேசியளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா காலத்தில் உதவும் நோக்கத்தில் வருங்கால வைப்ப நிதி வாடிக்கையாளர்களுக்கு பிஎம்ஜிகேஒய் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பணம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பணம் வழங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு தொடர்வதால் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வீடியோ கான்பரன்ஸ் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். அவர்களின் குறைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.