

யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மல்லிகாவுக்கு இளம் படுகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குளாவை சேர்ந்தவர் மல்லிகா. இவர் யூபிஎஸ்சி தேர்தவில் இந்திய அளவில் 621-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்குத் திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் மல்லிகாவை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், இளம் படுகர் சங்கம் சார்பில் மல்லிகாவுக்கு உதகையில் இன்று (ஆக.11) பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு சங்க தலைவர் முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமை வகித்தார்.
அவர் மல்லிகாவை கவுரவித்து இனிப்புகளை வழங்கி கூறும் போது, "மல்லிகாவின் தந்தை சுந்தரம் ஒரு விவசாயி. தாய் சித்ராதேவி கிராம செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சுந்தரம் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பெரும் சிரமத்துக்கு இடையே தனது மகளை படிக்க வைத்து, தற்போது மல்லிகா யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது படுக சமுதாயம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெருமையாகும்.
மல்லிகா பயிற்சி முடித்துப் பணியில் சேர்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவ வேண்டும். குறிப்பாக, நீலகிரி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.
விழாவில் பேசிய மல்லிகா, "எனக்குப் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பயிற்சி முடித்துப் பணியில் சேர்ந்து சமூகத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவேன்" என்றார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் மல்லிகாவை வாழ்த்தி, அதிமுக சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்கினார்.