Published : 11 Aug 2020 04:21 PM
Last Updated : 11 Aug 2020 04:21 PM

பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாது; அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, பாமக இளைஞணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:

"வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மாணவி, ஏற்கெனவே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சகோதரி என்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

வேலூர் பாகாயத்தை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர், குளிக்கும் போது படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி வந்துள்ளனர். அதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி கடந்த ஜூன் 10 ஆம் தேதி அவரது வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மூவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால், அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் விலகும் முன்பே அடுத்த பாலியல் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஏற்கெனவே பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இளைய சகோதரி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த செல்வராசன் என்ற இளைஞர், அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். உதவி கேட்டு அந்த பெண் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதி மக்கள் திரண்டு வந்தவுடன், அந்த இளைஞர் ஓடி விட்டார். எனினும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண்ணை இழந்து தவிக்கும், குடும்பத்திற்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுப்பது வக்கிரம் மற்றும் வன்முறையின் உச்சம் ஆகும். இதற்கு காரணமாவர்களை எந்த காரணத்திற்காகவும் மன்னிக்கக் கூடாது. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் மீது அக்கறையும், கருணையும் காட்டுவதற்கு பதிலாக வக்கிரத்தைக் காட்ட முயல்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்களால் இவ்வளவு துணிச்சலாக நடந்து கொள்வதற்கு காரணம்... பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடந்த காலங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படாதது தான் என்பதை மறுக்க முடியாது.

அண்மையில் கூட வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்தது குறித்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஒருவர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலையாகியிருக்கிறார். அந்த அளவுக்கு தான் தமிழகத்தில் பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்கு அச்சமே இல்லாத நிலை உருவாகி விடும்; தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உருவாகும். இது ஆபத்தானது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள், இனியும் ஒரு முறை அத்தகைய இழிசெயலை செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்னும் அளவுக்குத் தண்டனைகள், சட்டத்திற்குட்பட்டு, கடுமையாக இருக்க வேண்டும். அந்த தண்டனைகள் குறித்த செய்திகளே அத்தகைய குற்றங்களை செய்யத் துணியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கொடிய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே, ஏற்கெனவே பலமுறை நான் வலியுறுத்தியவாறு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டைப் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக மாற்ற அரசு முன்வர வேண்டும்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x