Published : 11 Aug 2020 03:50 PM
Last Updated : 11 Aug 2020 03:50 PM

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து செப்.2, 3, 4 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம்; இந்தியக் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து செப்.2, 3, 4 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (ஆக.10), இன்று (ஆக.11) ஆகிய நாட்களில் காணொலி வழியாக திருப்பூர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், சி.ஹெச்.வெங்கடாச்சலம், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்எல்ஏ உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கரோனா கால நெருக்கடிகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றியும், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளின் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"பாராட்டுகள்

1. கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க, தங்கள் உயிரை துச்சமாக கருதி முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், வங்கி ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

2. ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குக

கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பங்களுக்குத் தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும், அத்துடன் முன்களப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டால் தலா ரூபாய் இரண்டு லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

ஆனால், தற்போது கரோனா பணியில் ஈடுபட்டு, அதனால் உயிரிழந்த அரசுப் பணியாளர் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் மட்டும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது முன்களப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும் என்பதுடன் அரசு மீது அவநம்பிக்கையை உருவாக்கும்.

எனவே, இது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற்று, முதல்வர் முன்னர் அறிவித்ததைப் போல் கரோனா நோய் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு, உயிரிழந்த பணியாளர்கள் குடும்பங்களுக்குத் தலா ரூபாய் 50 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்குவதையும் உறுதி செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தமிழ்நாடு முதல்வரை கேட்டுக் கொள்கிறது.

3. சமூக ஊடகக் குற்றவாளிகளை கைது செய்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகம் பற்றியும், மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குறித்தும் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தி, அவதூறு பரப்பி வரும் சமூக விரோதக் கும்பலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் ஜூலை 17 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி வரும் சமூக விரோதக் கும்பலின் ஆத்திரமூட்டும் செயல் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வாய்மூடி மவுன சாட்சியாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், கடந்த ஜூலை 22 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

சங் பரிவார் ஆதரவாளர்கள் கொடுக்கும் புனைவுக் குற்றச்சாட்டுகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யும் காவல்துறை, கம்யூனிஸ்ட் கட்சி மீதும், மக்கள் நன்மதிப்பைப் பெற்ற மூத்தத் தலைவர் இரா.நல்லகண்ணு மீதும் முற்போக்குக் கருத்துக்களோடு செயல்படும் சமூக அமைப்புகள் மீதும் சமூக ஊடகங்களில் ஆபாச அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் சமூக விரோதிகளை காவல்துறை கண்டறிந்தும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் தடுக்கப்படுகின்றனர் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது.

சமூக அமைதியை சீர்குலைத்துக் கலவர சூழலை உருவாக்கி வரும் குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டி வரும் மத்திய, மாநில அரசுகளின் தவறான செயல்களைக் கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் வரும் 18 ஆம் தேதி, செவ்வாய் அன்று தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என நிர்வாகக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.

4. சுதந்திர தின விழா

நாடு கடுமையான நெருக்கடிகளில் சிக்கி இருக்கும் நிலையில், காலனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, விடுதலை அடைந்த 73-வது சுதந்திர தின விழாவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அமைப்புகள் தொடங்கி அனைத்து நிலை அமைப்புகளும் விரிவாக கொண்டாட வேண்டும்.

நீண்ட விடுதலைப் போராட்டத்தில் உருவான மதச்சார்பின்மை, அரசியல் அமைப்புச் சட்டம், அரசமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகள், நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிக் கோட்பாடுகள், மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள், சிறுபான்மை மக்கள், பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், வகுப்புவாத அரசியலை முறியடித்து ஜனநாயக பண்புகளை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சி அமைப்புகளையும் உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறது.

5. செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம்

கரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன. நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் ஊரடங்கு நிலையால் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்கள் தொடங்கி பெருந்தொழில்கள் வரையிலும், சேவைத்துறை உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளும், வேளாண்மை துறையும் பாதிக்கபட்டிருப்பதால், நவ தாராளமயக் கொள்கைகளால் தொடர்ந்து வந்த கடுமையான பொருளாதார நெருக்கடி மேலும் ஆழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் துன்ப, துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முடக்கம் செய்யும் முன்பு மக்கள் வாழ்க்கை நிலையில் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அனைத்துத் தரப்பினரும் நெருக்கடி காலத்தில் உயிர் வாழ போதுமான பொருளாதார உதவிகள் வழங்க வேண்டும் என அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகள் அவற்றை அலட்சியப்படுத்தி வருவது கவலையளிக்கிறது.

கரோனா நோய் தொற்றுக் காலத்தில் மக்கள் வாழ்க்கையை முடக்கி விட்ட மத்திய அரசு, பெருவணிகக் குழுமங்களின் நலனுக்காக வரைவு மின்சார சட்ட திருத்த மசோதா 2020, புதிய கல்விக் கொள்கை, வேளாண் வணிகம் தொடர்பான அவசரச் சட்டங்கள், சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 என மத்திய அரசு, மக்கள் விரோதக் கொள்கைகளை அவசரச் சட்டங்களாகவும், அரசாணைகளாகவும் வெளியிட்டு வருகின்றது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை தடுத்து, மாற்றுக் கருத்துக்களை வெளியிடக் கூடாது என அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து, அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை செய்வது மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள்

1. கடும் நெருக்கடியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, தொழில்களை தொடர்ந்து நடத்த அவர்களது தேவைகளுக்கேற்ப குறைந்த வட்டியில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் வங்கி கடன்கள் மீதான வட்டி, கூட்டு வட்டி, அபராத வட்டி என அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. கரோனா கால நெருக்கடியால் விவசாயிகள் அறுவடை செய்த விளைபொருட்களை இன்று வரை சந்தைப்படுத்திட முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

3. கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி தொழிலாளர்களின் தின ஊதியத்தை 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இத்திட்டத்தை விவசாய வேலைகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

4. நகர்ப்புறத்தில் வேலையில்லாமல் தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க புதிய நகர்புற வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

5. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்த தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவியல் சார்ந்த நவீன கல்வியை நிராகரித்து மனுதர்ம வழியிலான குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் கொண்டிருப்பதால் இதனை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

6. விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக மத்திய அரசு அறிவித்துள்ள கீழ்க்கண்ட சட்டங்களை

* மின்சார திருத்த மசோதா - 2020

* அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்

* விவசாயிகள் 'அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு' விலை உத்தரவாதம் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் - 2020

* வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்

* சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - 2020 ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

7. நிலஅளவை கட்டண உயர்வை ரத்து செய்

கரோனாவின் நெருக்கடி காலத்தில் தமிழ்நாடு அரசு நிலஅளவை கட்டணங்களை பலமடங்கு அதிகரித்திருப்பதை நிர்வாகக்குழு கண்டிக்கிறது. அவைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

8. தனியார் பால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்குக் கட்டுப்படியான விலை கொடுக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருகிறார்கள். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களின் விவசாயிகள் விரோத கொள்கையை எதிர்த்துப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் மீது தமிழ்நாடு அரசு தலையிட்டு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு கொள்முதல் செய்யும் விலை கிடைப்பதற்கு சட்டப்பூர்வமான ஏற்பாடு செய்ய வேண்டும்.

9. வழக்குகளை திரும்பப் பெறுக

கரோனா நெருக்கடி காலத்தில் அரசு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆளும் கட்சியினர் அரசியல் பரப்புரை செய்து வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி தரப்பில் அரசின் நடவடிக்கைகளின் மீது கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்து வருகிறார்கள். முக்கியமான கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈர்க்க கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து காவல்துறையின் மூலம் ஜனநாயக உரிமைகளை முடக்கும் திசைவழியில் செயல்படுவதை நிர்வாகக்குழு கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தொழிலாளர்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள் நடத்திய இயக்கங்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என நிர்வாகக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. இ-பாஸ் முறையை ரத்து செய்க

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தித் தொழில் நிறுவனங்களின் 75 சதவிகித தொழிலாளர் பணிபுரியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியிடத்திற்கு சென்று வர தவித்து வருகின்றனர்.

அரசு நடைமுறைப்படுத்தி வரும் இ-பாஸ் முறையில் ஊழல் மலிந்து மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்து கட்டுப்பாடுகளை அனுசரித்துப் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

11. நிவாரண உதவி வழங்குக

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் முடிந்து விட்டன. இந்த காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்துள்ள மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு வருமான எல்லைக்கு வெளியே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000, புலம்பெயர்ந்த அமைப்புசார தொழிலாளர் குடும்பங்களுக்குத் தலா ரூ.7,500 நிவாரண நிதி வழங்க வேண்டுமென கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12. உள்ளாட்சி அதிகாரங்களை பறிக்காதே

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசு இடைமறித்து அதிகாரவர்க்கத்தின் மூலம் செயலாற்றி வருகிறது. இது அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை உடனடியாக கைவிட்டு உள்ளாட்சி அமைப்புகள் முழு அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

13. தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுக

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள் என்பதால் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இயற்கை பேரிடரில் உயிரிழந்துள்ள, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக உயிரிழந்தவர்களுக்குக் கேரளா அரசு முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கவும், காயம்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் புதிய இழப்பீடு வழங்கவும், மத்திய அரசும் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளும் ஒருங்கிணைந்து உதவிட வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

14. தாலிக்குத் தங்கம் வழங்குக

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த இயலாமல் மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தங்கம் விலை உயர்வின் காரணமாக அடிதட்டு சாமானிய மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

வாழ்க்கை முறையில் தாலி அணிவது, காதணி, மூக்குத்திப் போடுவது போன்ற குறைந்தபட்ச தேவைக்காவது தங்கம் வாங்கும் பண்பாட்டு வழக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு, வருமான வரி எல்லைக்கு வெளியே உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் தாலிக்குத் தங்கம் வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

15. அந்நிய வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்குத் தலா ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதியளித்திருப்பதன்படி கரோனா நெருக்கடி காலத்திலாவது கருப்புப் பணத்தை மீட்டுவந்து மக்களுக்கு உதவ வேண்டும் என மத்திய அரசையும், பிரதமரையும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது"

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x