கரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்; சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சிந்திக்க நேரமில்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ
கரோனாவில் இருந்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரம் கிராமத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமூடி தேயிலைத் தோட்டத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ஏற்பட்ட பெரிய மண் சரிவில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று இன்று காலை வரை 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில், கயத்தாறு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 24 பேர். ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கண்ணன், அவரது குழந்தைகள் நதியா, விஷ்ணு, விஜயலட்சுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவரது மனைவி சீத்தாலட்சுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் உதவி இயக்குநர் உன்னிகிருஷ்ணன், மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் இருந்து அங்கே உள்ள நிலைமைகளை மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தெரிவித்து வருகிறார்.
நேற்று கயத்தாறு பகுதியில் பாரதிநகர் உள்ள உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாக சொல்லியிருக்கிறோம்.
முழு தகவலும் கிடைத்த பிறகு, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எத்தனை பேர் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர் என்ற முழு விபரம் தெரியவரும். அதனை அறிந்தவுடன் அந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு கேரளாவில் இருந்து திரும்பி வந்து இங்கேயே தங்க வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு குடியிருப்பு வசதி போன்ற அத்தனை அடிப்படை வசதிகள், கல்வி பயில்கின்ற நிலையில் உள்ள குழந்தைகள் இருந்தால் அவர்கள் கல்விக்காகவும், படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் நிலையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்க ஆவன செய்யப்படும்.
அதே போல், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி சீத்தாலட்சுமியை பார்க்கச் செல்ல வேண்டும் என இங்குள்ள அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முறைப்படி அவர்களுக்கு இ-பாஸ் அனுமதி பெற்று வழங்கி சென்று வருவதற்கு நிச்சயமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை. தேர்தலைப் பற்றி சிந்திப்பவர் அரசியல்வாதி. மக்களைப் பற்றி சிந்திப்பவர்கள் நாங்கள் என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வார். அதே வழியில் தான் நாங்கள் பயணித்து வருகிறோம். இன்று மனித இனமே அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. தேர்தல் வரும்போது மக்கள் நல்ல முடிவெடுப்பார்கள்.
திரைப்படப் படப்பிடிப்பு பொறுத்தவரை வெளிப்புறங்களில் நடக்கும். அப்போது மக்கள் அதிகம் கூடும் நிலை ஏற்படும். தற்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசே அறிவுறுத்தி வருகிறது. அதனால் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கினால் சரியாக இருக்காது. வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் முடிவெடுப்பார், என்றார் அவர்.
