

வசந்தகுமார் எம்.பி., கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்மத பிரார்த்தனை நடந்தது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (70). கடந்த மாதம் சென்னை சென்ற அவர் அங்கேயே கட்சிப் பணி, மற்றும் வர்த்தகத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில் வசந்தகுமார் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வசந்தகுமாரும், அவரது மனைவியும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
வசந்தகுமார் எம்.பி.,யுடன் தொடர்பில் இருந்த கட்சியினர், மற்றும் கடை ஊழியர்களைத் தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி. விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் இன்று குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மும்மத பிராத்தனை நடைபெற்றது.
நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் சந்திப்பில் அற்புத விநாயகர் கோயில், கிறிஸ்துநகர் ஆலயம், மணிமேடை தர்கா ஆகியவற்றில் நடந்த இந்த பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.