

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் பெருகி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து 8 நாட்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.
சீர்காழியில் கடந்த சில தினங்களாகவே கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. தினமும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த 10 நபர்களுக்காவது தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு சீர்காழி பகுதி கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இப்போது சீர்காழி வட்டாரத்தில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் சீர்காழி அரசு மருத்துவமனையிலேயே கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது சீர்காழி வட்டாரத்தில் கரோனா உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் கருதி அரசின் அனுமதியுடன் ஆகஸ்ட் 13-ம் தேதி வியாழன் முதல் 8 நாட்களுக்கு சீர்காழியில் சுய முழு ஊரடங்கைக் கடைப்பிடிப்பது என்று சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி நகரில் பால், மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்துக் கடைகளும் இந்த சுய முழு அடைப்பில் பங்கேற்கும் என்றும், பொதுமக்களும் வணிகர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அந்த சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் சீர்காழியில் உள்ள மற்ற இரண்டு வர்த்தக சங்கத்தினர் இதற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால் இந்த சுய ஊரடங்கு எந்த அளவுக்கு வர்த்தகர்களால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரியவில்லை.