Last Updated : 11 Aug, 2020 01:00 PM

 

Published : 11 Aug 2020 01:00 PM
Last Updated : 11 Aug 2020 01:00 PM

பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் விரக்தி

தென்காசி

பெரிய வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும் பெரிய வெங்காய சாகுபடி நடைபெறும். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் 150 ரூபாய் வரை விற்பனையானது. விலை உச்சத்தை தொட்டபோதும் தட்டுப்பாடு நீடித்ததால், வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இதனால் இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்போடு விவசாயிகள் பெரிய வெங்காயம் சாகுபடி செய்தனர். கீழப்பாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயம் விலை படிப்படியாகக் குறைந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பாவூர்சத்திரம் சந்தைக்கு தினமும் 300 முதல் 400 டன் வரை பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. உள்ளூர் பகுதிகளில் விளைந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ 7 முதல் 8 ரூபாய் வரையும், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோ 10 முதல் 12 ரூபாய் வரையும் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “உள்ளூர் பகுதியில் தற்போது அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.

மேலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும். பெரிய அளவில் இருக்கும் மகாராஷ்டிர மாநில வெங்காயத்தையே பெரும்பாலான வியாபாரிகள் வாங்குகின்றனர். எனவே, உள்ளூர் பகுதிகளில் உள்ள வெங்காயம் விலை குறைவாக உள்ளது” என்றனர்.

கீழப்பாவூரைச் சேர்ந்த விவசாயி சிவா கூறும்போது, “அளவில் பெரியதாக உள்ள வெங்காயம் தற்போது 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அளவில் சிறதாக இருக்கும் வெங்காயம் 5 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகும். சராசரியாக 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்பனையாகும். வயலில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை வாகனத்தில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு செல்ல ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் செலவாகும்.

ஒரு ஆள் அதிகபட்சமாக 100 கிலோ வெங்காயம் அறுவடை செய்வார்கள். அதற்கு ஆள் கூலி 125 ரூபாய் ஆகும். மார்க்கெட்டில் 10 சதவீத கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். அதற்கு 30 ரூபாய் ஆகும். 300 ரூபாய்க்கு வெங்காயம் விற்றால் 100 முதல் 125 ரூபாய் மட்டுமே கையில் கிடைக்கும்.

விதை, உழவு, நடவு, பூச்சி மருந்து, உரம், ஆள் கூலி என லட்சக்கணக்கில் செலவு செய்து, வெயில், மழையில் உழைத்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர். ஒரு கிலோ 20 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையானால் மட்டுமே லாபம் கிடைக்கும். தற்போது விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பல விவசாயிகள் பெரிய வெங்காய பயிர்களை பராமரிக்காமல் விட்டுவிட்டனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x