

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து இருவரும் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனின் தம்பியும், தெலங்கானா ஆளுனர் தமிழிசையின் சித்தப்பாவுமான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார் (70) கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
கரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு 10 மணி அளவில் வசந்தகுமார் அவரது மனைவி இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
வசந்த குமாரிடம் பேசினேன் @vasanthakumarH
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வசந்தகுமாருக்கு # கோவிட்-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு பாஸிட்டிவ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை விரைவாக குணமடைய சகோதரருக்கு வாழ்த்துகள். # கோவிட் காலத்தில் மக்களுக்கு உதவுவதில் அவர் முன்னணியில் இருப்பவர். # சகோதரர் விரைவில் நலமடைய வேண்டும்”.
இவ்வாறு சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று விஷ்ணு பிரசாத் எம்.பி.யும் வசந்தகுமார் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“கன்னியாகுமரி எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான அண்ணண் வசந்தகுமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நலமாக இருக்கிறார். அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார்.