Published : 11 Aug 2020 01:49 PM
Last Updated : 11 Aug 2020 01:49 PM

மன உறுதி மல்லிகா: தனித்து சென்னை வந்து 3 தோல்விகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற நீலகிரி மாணவி

2019 சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 621 இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் மல்லிகா. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக நீலகிரி மாவட்டத்திலிருந்து 2016-ம் ஆண்டில் சென்னை வந்தவர் 3 முறை தோல்வியைத் தழுவியபோதும் விடாமுயற்சியுடன் வென்றுள்ளார்.

இந்தியாவில் உயரிய படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது ஆட்சிப் பணிக்கான படிப்பு. குடிமைப்பணி தேர்வுகள் என்றழைக்கப்படுபவை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் போன்றவை ஆகும். இதற்காகப் படிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். லட்சிய உறுதி, விடாமுயற்சி முக்கியம்.

மூன்று கட்டங்களைத் தாண்டவேண்டிய கடினமான இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதில் பலர் தோல்விகளைப் பெற்று அதை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிச் சாதித்துள்ளார்கள். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து, படித்து சென்னைக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் கிளம்பிய மாணவி இந்த ஆண்டு சிவில் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

தனது படிப்புமேல் உள்ள நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்து, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சென்னை வந்தவருக்கு அதுகுறித்த புரிதல் வரவே சில ஆண்டுகள் ஓடிவிட்டன. சாதாரணமாக இதை அவர் சாதிக்கவில்லை, மூன்று அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தார். ஆனாலும், விடாமுயற்சினால் அகில இந்திய அளவில் 621-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் மல்லிகா.

நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் சமூகத்தில் பிறந்த மாணவி, சென்னைக்குத் தனியாக வந்து சாதிப்பதும், அவர் முன்னேற்றத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் உடன் நின்றதும் சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வல்ல. குடிமைப் பணித் தேர்வில் பலர் சாதித்தாலும் எத்தகைய சூழ்நிலையிலிருந்து வந்து சாதிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த முயற்சிக்கு மரியாதை உள்ளது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். ஏதோ ஒரு புள்ளி, ஒரு சிறு சம்பவம் அவர்களுக்கான லட்சியத்தை உணர்த்தியிருக்கும். அதன் பின்னர் அதைப் பின்பற்றி அவர்கள் விடாமுயற்சி எடுத்து சாதிப்பார்கள், இதற்குக் காலம், சூழ்நிலை அமைவது மிக முக்கியம். சிலர் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே செதுக்குவார்கள்.

மல்லிகாவை 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் சந்தித்து அவரது முயற்சி குறித்துக் கேட்டோம்.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

அப்பா சிறிய விவசாயி. அம்மா கிராம சுகாதாரச் செவிலியர். சிறிய அளவிலான குடும்பம், வீட்டில் ஒரே பெண் நான். வேறு குழந்தைகள் இல்லை.

பள்ளிக் கல்வியை எங்கு படித்தீர்கள்?

கோத்தகிரி, குன்னூரில் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆங்கில மீடியம். பின்னர் பிஎஸ்சி பயோடெக்னாலஜியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முடித்தேன்.

சிவில் தேர்வு லட்சியம் எப்படி உருவானது?

அம்மாவைப் பார்த்து முதலில் வந்தது. அம்மா செவிலியராக இருந்ததால் சுதந்திரமான ஒரு பெண்மணியாக இருந்தார். ஒரு பெண்ணாக சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றால் ஒரு பணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கல்லூரி வாழ்க்கையில்தான் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த எண்ணமே வந்தது.

கல்லூரியில் சிவில் தேர்வுகள் குறித்து சீனியர்கள் பேசுவார்கள், கல்லூரியிலும் இதுபோன்ற வகுப்புகள், தன்னம்பிக்கை வகுப்புகள் மூலம் எனக்குள் இந்த எண்ணம் தோன்றியது. கல்லூரி வாழ்க்கைதான் எனக்கு இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தது.

யாரையாவது ரோல் மாடலாக உங்களுக்கு எடுத்துக்கொண்டீர்களா?

அப்படி எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பொறுப்பான அரசுப் பதவியில் இணையும்போது மக்களுக்குச் சேவை செய்வது எளிதாக இருக்கும், நம்மிடம் பொறுப்பும் இருக்கும், செயல்படுவதும் சாத்தியமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் தோன்றியது. அதன்பின்னர் போகப்போக பயிற்சி எடுத்து தேர்வுகளைச் சந்தித்தபோது பல ஆளுமைகளைப் பார்த்தேன்.

தற்போது எடுத்துள்ள ரேங்க் மூலம் பயிற்சி நிறைவில் என்ன துறை கிடைக்கும்?

ஐஆர்எஸ் (இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்) கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சொந்த மாநிலத்தில் கிடைக்குமா? என்பது தெரியாது.

சென்னைக்கு எந்த ஆண்டு வந்தீர்கள்? இங்கு ஏதாவது பணியில் இணைந்தீர்களா?

2016-ம் ஆண்டு வந்தேன். எந்த வேலையிலும் சேரவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் ஆவதற்காகவே சென்னை வந்தேன். மனிதநேயம் அறக்கட்டளையில் சேர்ந்தேன். மிகுந்த பயனாக இருந்தது. எனக்குப் பல உதவிகள் செய்தார்கள். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படித் தயார் ஆவது எனத் தெரிந்துகொண்டேன்.

2016-க்கும் 2020-க்கும் இடையில் தேர்ச்சி பெற 4 ஆண்டுகள் ஆனதா ?

முதல் மூன்று ஆண்டுகளில் மூன்று முறை தேர்வெழுதியும் முதல் நிலைத் தேர்விலேயே சிறிய அளவிலான மதிப்பெண்களில் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற திவ்யா எனக்கு சில ஆலோசனைகளை வழங்கி ஷெனாய் நகரில் உள்ள சந்தோஷ் சபரி பயிற்சி மையத்துக்கு அனுப்பினார்.

முதல் மூன்று ஆண்டுகள், 3 முயற்சிகளில் தோல்வி. அப்போது உங்களுக்குள் என்ன தோன்றியது?

மூன்றுமே முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியானது. நன்றாகப் படிப்பேன், ஆனால் சில மதிப்பெண்களில் வாய்ப்பு தவறிப்போனது. சந்தோஷ் சபரி பயிற்சி மையத்தில் இணைந்தபின் கூடுதலாக சில நுணுக்கமான விஷயங்களைச் சொல்லித் தந்தார்கள். உத்திகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும், நாம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாறவேண்டும், பாடங்களைக் கையாளுவதில் கடின உழைப்பை விட புத்திசாலித்தனமாக உழைப்பது முக்கியம் என்பதையும் இங்கு தெரிந்துகொண்டேன்.

ஆசிரியர் சபரி சார் கற்றுக்கொடுத்த இன்னொரு உத்தி, வெற்றி பெறவேண்டும் என்பதை விட முயற்சி எடுப்பது முக்கியம், முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். பலன் தானாக தேடி வரும் என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். கடினமாக முயற்சி செய்தேன். அது பதற்றமில்லாமல் வெற்றியை நோக்கித் தள்ளியது.

அதனால் 4 ஆண்டுகளில் முதல் வெற்றியாக குரூப்-1 தேர்வில் முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்றேன். நீண்ட ஆண்டுகள் தோல்விக்குப் பின் கிடைத்த முதல் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அழுதே விட்டேன். அந்த நம்பிக்கையில் அதே வேகத்தில் முயற்சி செய்தேன்.

4-வது முறை பெரிய வெற்றியாக சாதித்து விட்டீர்கள் அல்லவா?

நிச்சயமாக, அதன் பின்னர் பயிற்சி மையம் வழிகாட்டுதல், நண்பர்கள், பெற்றோர் ஊக்கம் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்.

3 தடவை தொடர் தோல்வி அப்போது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் என்ன மனநிலை இருந்தது?

இதில் முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒரு முறைகூட எனது பெற்றோர் தோல்வி பற்றி என்னிடம் கேட்டதில்லை. என்னம்மா அடுத்து முயற்சி செய்தால் வந்துவிடுவாயா என்றுதான் கேட்பார்கள். அவர்களுக்குள் வருத்தம் இருந்திருக்கும். அக்கம் பக்கம் பலரும் கேட்டிருப்பார்கள். ஆனாலும் ஒருமுறைகூட அதை என்னிடம் அவர்கள் காண்பித்ததில்லை.

என்னைப் பொறுத்தவரை சில மதிப்பெண்களில் வெற்றியைத் தவறவிட்டதால் இவ்வளவு தூரம் படித்து முயற்சி எடுத்தோம், சில மதிப்பெண்கள்தானே மேலும் முயற்சி செய்வோம், என்ன தவறு என்பதைக் களைந்து முயற்சி செய்வோம் என்று நினைத்தேன். என்னுடைய தாய்மாமன் எனக்கு உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு தோல்வியின்போதும் அதுகுறித்த சிந்தனையே வராமல் என்னைப் பார்த்துக்கொண்டார்கள். அடுத்து நண்பர்கள், அவர்கள் முக்கியமானவர்கள். என்னைத் தோல்வியின் நிழலே படியாமல் பார்த்துக்கொண்டார்கள்.

இதுதவிர நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேடம் பல ஆலோசனைகளை வழங்கினார். எனது சீனியர்கள் சிவகுரு சார், ராஜ்குமார் சார் போன்றவர்கள் உதவினார்கள்.

உங்களை நெகிழ வைத்த சம்பவம்?

எங்கள் பயிற்சி மையத்தில் அங்கிருந்த ஆசிரியர்கள் நான் வெற்றி பெற எடுத்த முயற்சி கொடுத்த ஊக்கம் மறக்கமுடியாதது. அவர்கள் தேர்வைத் தவறவிட்டவர்கள், ஏதோ ஒருவகையில் வெற்றிபெற முடியாமல் போனவர்கள். ஆனாலும் எங்கள் பயிற்சியாளர்கள் ஒரு மாணவியாக நான் வெற்றி பெற முழு மனதோடு உழைத்தார்கள். என் வெற்றியை அவர்கள் வெற்றியாகப் பார்த்தார்கள். அது என் மனதை நெகிழ வைத்த ஒன்று. அவர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும்? உங்களைப் போன்று தயாராகும் மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன?

எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஒரே பெண் என்பதால் எனக்குப் புத்தகமே துணையாக இருந்தது. அதனால் அது எனக்கு கடினமாகத் தெரியவில்லை. நான் 10 மணி நேரம்வரை படிப்பேன். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பல மாற்றங்கள் வந்தவண்ணம் உள்ளன. எப்படித் தயார் ஆவது?

அனைத்துத் தேர்வுகளிலும் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மாதிரிவகை ஒன்றாகத்தான் இருக்கும். அது மாறாது. அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய தேர்வுகளின் கேள்வித்தாள்களை அதிகம் கவனிக்க வேண்டும். அதைப் படிக்க படிக்க அதில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்பது புரியும். புத்தகங்கள் அதிகம் படிப்பதை விட என்னென்ன வகை கேள்விகள் இதற்கு முன்னர் வந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

முக்கியமான ஒன்று நாம் எத்தனை புத்தகங்கள் படித்தாலும் அதில் நமக்குப் புரிந்ததை நாம் கைப்பட எழுதிப் பழக வேண்டும். அதுதான் நமக்குக் கடைசி வரை இருக்கும். ஆகவே அதிகம் படிக்க வேண்டும். அதைவிட அதை அதிகம் எழுதிப் பழக வேண்டும். சிறு சிறு நோட்ஸாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது கடைசி வரை நமக்கு உதவும்.

முதல்நிலை, முதன்மைத் தேர்வு எது கடினமாக இருந்தது?

நான் முதல்நிலைத் தேர்வைத்தான் கடினமாக உணர்ந்தேன், அதில் போட்டியாளர்கள் அதிகம், நெகட்டிவ் மதிப்பெண் ஒரு பிரச்சினை. நெகட்டிவ் மதிப்பெண் அதிகம் வந்துவிடுமோ என்கிற பயம் காரணமாக பல கேள்விகளைத் தவிர்த்துவிடுவோம். இது அனைவருக்கும் வரும் பிரச்சினை.

அதை எப்படி வெல்வது?

முயற்சிதான். முதலில் அதைக் கண்டு பயப்படக்கூடாது. ரிஸ்க் எடுக்கத் தயங்கக்கூடாது, அந்த இடத்தில் அந்தத் தயக்கத்தை விட்டுவிட்டால் வெல்லலாம். 40 சதவீதம் கேள்விக்கு நமக்குப் பதில் கட்டாயம் தெரிந்திருக்கும், 40 சதவீதக் கேள்விகளில் நமக்குக் குழப்பம் இருக்கும். ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால், முதன்மைத் தேர்வு அப்படியல்ல. அதை நாம் தான் எழுதப்போகிறோம், அது எளிதாகத்தான் இருக்கும்.

ஒரு பெண்ணாக இதுபோன்ற தேர்வுகளில், கடந்த 4 ஆண்டுகளில் தடையாக உணர்ந்த விஷயம் ஏதாவது இருக்கிறதா?

ஆண்டுகள் போகப்போக வயதாகிறதே. இதற்கு மேலும் படிக்க வைக்க வேண்டுமா? திருமணம் செய்யாமல் வைத்திருக்கிறீர்களே போன்ற கேள்விகள் வீட்டில் எழுந்தன. பெண்ணாக வெளியில் அதிக நேரம் இருக்க முடிவதில்லை, நேரத்துக்கு ஹாஸ்டலுக்குத் திரும்பி விடவேண்டும் என்கிற பிரச்சினை இருந்தது. ஆனாலும் ஆண், பெண் இருபாலருக்குமே இந்தக் காலகட்டம் கடினமான காலம்தான். மனோ ரீதியாக அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?

உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். வெளியில் மற்றவர்கள் ஆயிரம் சொன்னாலும் நம்முடைய லட்சியம் என்னவென்று தெரிகிறதோ அதில் கட்டாயம் தொடர் முயற்சி எடுக்கவேண்டும். பெரும்பாலானவர்கள் அடுத்தவர்களுக்காக தங்கள் எண்ணத்தை மாற்றி வாழ்கிறார்கள். அது வெற்றியைத் தராது. ஆசைப்பட்டதை முயன்றால் வெற்றி அடையலாம், அடையாவிட்டாலும் நம் எண்ணப்படி வாழ்ந்தோம் என்கிற திருப்தி இருக்கும்.

தற்போது பயிற்சி முடிவில் ஐஆர்எஸ் கிடைக்கலாம் இத்துடன் திருப்தி அடைந்துவிடுகிறீர்களா?

இல்லை ஐஏஎஸ்தான் எனது லட்சியம். அதனால் மீண்டும் தேர்வெழுதி அதை அடைய முயல்வேன்.

இவ்வாறு மல்லிகா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x