Published : 11 Aug 2020 11:49 AM
Last Updated : 11 Aug 2020 11:49 AM

தரிசாய்க் கிடந்த நொய்யல் நிலங்கள் உயிர் பெறும் தருணம்!- 20 ஆண்டுகளுக்குப் பிறகு விமோசனம் பெறும் விவசாயிகள்

சாயக்கழிவுகள் கலந்ததால் கடந்த 20 வருடங்களாகத் திறந்தே வைக்கப்பட்டிருந்த சின்னமுத்தூர் அணை மதகுகள் தற்போது நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தின் காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தேங்கும் வெள்ளநீர், வாய்க்கால் வழியே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தரிசாகக் கிடந்த சுற்றுவட்டார நிலங்கள் உயிர் பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி, நரசீபுரம், கோவை குற்றாலம் மலைகளிலிருந்து புறப்படும் பெரியாறு, சின்னாறுகள் ஆலாந்துறை கூடுதுறை அருகே ஒன்றிணைந்து நொய்யல் நதியாகின்றன. இந்த நதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 160 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியில் இணைகிறது. இந்த நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்தும் வகையில் நொய்யல் தோற்றுவாயிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு ஒரத்துப்பாளையத்தில் ஓர் அணையும், அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னமுத்தூரில் இன்னொரு அணையும் தமிழக அரசால் கட்டப்பட்டன.

1990-ல் கட்டி முடிக்கப்பட்டு 1991-ல் திறக்கப்பட்ட இந்த அணைகள் விவசாயத்துக்குப் பெரும் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன. திருப்பூர் நகரத்து சாயப் பட்டறைகளிலிருந்து நொய்யல் நதியில் கலந்த சாயக்கழிவுகள்தான் அதற்குக் காரணம். இதனால் இந்தப் பகுதி நிலங்களும், நிலத்தடி நீரும், கிணறுகளும் பாழ்பட்டன. பயிர்கள் கருகின. இந்த நீரைக் குடித்த ஆடு மாடுகள் இறந்தன. மக்கள் தோல் நோய்கள், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்குள்ளாகினர். இதையடுத்து விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல், பொதுநல அமைப்புகள் இந்த அணைகளில் நீர் தேக்குவதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தின.

இங்குள்ள மண் மாதிரிகள், நீர் மாதிரிகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள், நீரியல் ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து, ‘இந்த நிலம் பயன்படுத்துவற்கு லாயக்கற்றது’ என்று அறிவித்தன. விவசாயிகள், சூழல் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுடன் சாய ஆலைகள் இயங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு வழக்குகள் நடந்த நிலையில் இந்த ஆற்றுக்குக் குறுக்காக அணைகளில் நீர் தேக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன் விளைவாகக் கடந்த 20 ஆண்டுகளாக இந்த அணைகள் திறக்கப்பட்டே கிடக்கின்றன. தற்போது சாயக்கழிவு நீர் கட்டுப்படுத்தப்பட்டதாலும், அதை மீறி வரும் சாய நீரும் தேங்காமல் மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதாலும் இப்பகுதி மக்கள் மானாவாரி விவசாயத்தில் இறங்க ஆரம்பித்துள்ளனர். தவிர, தற்போது நிலம் ஓரளவு உப்பு, அமிலத் தன்மையிலிருந்து விடுபட்டுவிட்டது. இந்நிலையில், மழைக்காலங்களில் வரும் வெள்ள நீரை அணைப்பாளையம் அணையில் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம் என்று விவசாயிகள் கோரிவருகின்றனர்.

கார்வழி அணைப்பாளையம் அணைக்கு வாய்க்காலில் செல்லும் நீர்

இதற்கிடையே இங்குள்ள மண், நீர் மாதிரிகளைப் பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள், ‘மழைக்காலத்தில் மட்டும் நீரை அணைப்பாளையம் அணையில் தேக்கலாம். மற்ற காலங்களில் வரும் நீரை ஆற்றிலேயே விட்டு டலாம்’ என்று தெளிவுபடுத்தியுள்ளனர். நீதிமன்றத்திடமிருந்து நிபந்தனைத் தளர்வையும் அரசுத் தரப்பு பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் சின்னமுத்தூர் அணையின் கதவுகள் அடைக்கப்பட்டு, அதன் இடது ற வாய்க்கால் கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியே கார்வழி அணைப்பாளையம் அணைக்குத் தண்ணீர் விடப்பட்டது.

10 நாட்களில் கார்வழி அணை நிரம்ப, நொய்யலில் வெள்ளமும் குறைய, சின்னமுத்தூர் அணையில் மூடப்பட்ட மதகுகள் திறந்துவிடப்பட்டன. அணைப்பாளையம் வாய்க்கால் அடைக்கப்பட்டது. ஆக, நொய்யல் ஆற்றுக்குச் சம்பந்தமில்லாத வழியில் கார்வழி அணை இருப்பதால் அங்கு தேங்கிய நீர் முழுமையாக இப்பகுதி விவசாயிகளுக்குப் பயன்பட்டது. அதேபோல் இப்போதும் தென்மேற்குப் பருவமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சின்னமுத்தூர் அணைக் கதவுகளை அடைத்து தேங்கும் நீரை கார்வழி அணைக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மூன்று நாட்களாக இடதுபுற வாய்க்காலில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. கார்வழி அணை நிரம்பி வருகிறது.

இந்த அணைகள் உள்ள பகுதிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்துவரும் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ஈஸ்வரன் இதுகுறித்துக் கூறும்போது, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பள்ளி மாணவிகள் இந்தப் பகுதியில் நடத்திய ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இதுகுறித்த ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்து இளம் விஞ்ஞானிகள் பட்டத்தையும் எங்கள் மாணவிகள் தேசிய அளவில் பல முறை வென்றுள்ளனர்.

அந்த அடிப்படையில் திருப்பூரில் உள்ள பெம் பள்ளி மாணவிகளை வைத்தும் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் ‘மழைக்காலத்தில் இங்கே பெருக்கெடுக்கும் நொய்யலாற்று நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்தலாமா?’ என்ற ஒரு ஆய்வை செய்தோம். இந்த ஆய்வில் பியாஷபீர் தலைமையில் 5 மாணவிகள் ஈடுபட்டனர். ‘நீரை மழைக்காலங்களில் பயன்படுத்தலாம்’ எனும் ஆய்வு முடிவை மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், பிரதமர், நீதிமன்றம் வரை அனுப்பிவைத்தோம். 2017-ல் அகமதாபாத் நகரில் நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும் சமர்ப்பித்தோம். அந்த ஆய்வும்கூட இந்த அணையில் மழைக்கால நீர் தேக்குவதற்கு உதவியாக இருந்துள்ளது” என்று தெரிவித்தார்.

சின்னமுத்தூர் அணையில் நீர் தேங்கியிருக்கும் காட்சி

‘கார்வழி அணைப்பாளையம் அணையில் நீர் தேக்குவதன் மூலம் தற்போது அஞ்சூர், துக்காச்சி, முன்னூர், அத்திபாளையம் என 50 சதுர மைல் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் ஊறும்; கிணறுகள் சுரக்கும். காய்ந்த பூமியில் பசுமை துளிர்க்கும்’ என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி கூறுகையில், “5 ஏக்கர் நிலம் எனக்கு இருக்குன்னுதான் பேரு. 20 வருஷமா எதுவுமே செய்ய முடியலை. மாடு, கன்றுகூட வளர்த்த முடியலை. தீவனப் பயிர் வைக்க முடியலை. அதனால வெளியூருக்கு வாட்ச்மேன் வேலை, மில் வேலை, பனியன் வேலைன்னு போயிட்டோம்.

போன வருஷம் வந்து சோளம் போட்டேன். நல்லா வந்தது. இப்ப வர்ற தண்ணியில சோளமும், கொள்ளும் தூவலாம்னு இருக்கேன். இப்ப மெல்ல மெல்ல எங்க அணைக்கு விமோசனம் கிடைச்சுட்டு வருது. இனி எங்களுக்கு விடிவுகாலம்தான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x