

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசையும் எதிர் தரப்பாக சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் நலன் காக்கும் கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும் சிதம்பரம் எம்எல்ஏ-வுமான பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி எம்எம்ஏ அஸ்லம் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட் டத்தின்போது வைகோ செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், ஆந்திர அரசு உயர்நீதிமன்றத்தில் இதற்கு தடையாணை வாங்கிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் அறிக்கையை இதுவரை உறவினர்களுக்கு வழங்கவில்லை. தமிழர்கள் சுடப்பட்டதில் ஆந்திர காவல் துறை அதிகாரிகள், அமைச்சர் என அனைவரையும் தண்டிக்க உச்சநீதிமன்றம் வரை செல்வோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மீத்தேன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி யும் மேகேதாட்டுவில் அணை கட்டுவதைக் கைவிட வலியுறுத் தியும் திருவாரூரில் அக்டோபர் 5-ம் தேதி மக்கள் நலன் காக்கும் கூட்டணி சார்பில் மிகப்பெரிய அளவில் பேரணியும் ஆர்ப்பாட்ட மும் நடத்தப்படும் என்றார்.