

நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமய மாக்கல் திட்டத்தின்கீழ், கோவை யில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரி, சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆச்சான்குளம், பள்ளபாளையம் குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட குளங்களின் கரைகளைப் பலப்படுத்தும் நோக்கில், கான்கிரீட் சுவர் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை அகற்று வதால் குளங்களின் உயிர்ச் சூழல் பாதிக்கப்படும் என்று சூழலில் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து கோவை இயற்கை சங்கத்தைச் சேர்ந்த (நேச்சர் சொசைட்டி) பி.ஆர்.செல்வராஜ், பி.பி.பாலாஜி ஆகியோர் கூறிய தாவது: தடுப்பணைகளை கான்கிரீட் மூலம் சீரமைப்பதில் தவறில்லை. ஆனால், குளக்கரையில் இப்பணியை மேற்கொள்ளும்போது உயிர்ச்சூ ழல் பாதிக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கத்தில் குளத்தைச் சார்ந் துள்ள அனைத்து உயிரினங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கரையோரம் உள்ள சிறிய பூச்சிகள், புழுக்களை உணவாக உட்கொள்ளும் பறவைகள் நிறைய உள்ளன.
இயற்கையான கரை இருந் தால் மட்டுமே, அந்தப் பறவைகள் வரும். சாம்பல் கதிர்க்குருவி போன்ற சிறிய பறவைகளுக்கு, நாணல் புற்கள், புதர்கள் கட்டாயம் தேவை. அவற்றை முழுமையாக அகற்றிவிட்டால் பாதிப்பு ஏற்படும்.
கழிவுநீர் கலப்பு, மனிதர்கள் நடமாட்டம் போன்றவற்றால் குளங்கள் பாதிக்கப்பட்டாலும், ஆச்சான்குளம், உக்குளம், வெள்ளலூர் குளம் போன்றவை பறவைகள் வாழும் சூழலை இன்றும் தக்கவைத்துக்கொண்டி ருக்கின்றன. பட்டை தலை வாத்து என்ற பறவை இமயமலைக்கு அப்பாலிருந்து இங்கு வருகிறது. ஆச்சான்குளக்கரையோரம் உள்ள நாணல்புற்களில் நாணல் கதிர்க்குருவி இனப்பெருக்கும் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வேறெந்த நீர்நிலையிலும் இதை பரவலாக காண முடியாது.
செண்டு வாத்து, குள்ளத்தாரா ஆகிய வாத்து இனங்களை உக்குளம், ஆச்சான்குளம் போன்ற இடங்களில் மட்டுமே காண முடியும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பூநாரைகள் ஆச்சான்குளத்துக்கு வந்துள்ளன. ஆச்சான்குளத்தில் சாம்பல் நாரையும், வெள்ளலூரில் கூழைக்கடாவும் கூடுவைத்து குஞ்சு பொரித்து வருகின்றன. எனவே, குளக்கரையில் கான்கிரீட் போடும் திட்டத்தை பொதுப்பணித் துறை மறுபரிசீலனை வேண்டும்" என்றனர்.
700 ஆண்டுகள் பழமையானவை
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கொ.மோகன்ராஜ் கூறும்போது, "கோவையில் உள்ள குளங்கள் ஏறத்தாழ 700 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. இத்தனை ஆண்டுகளில் கான்கிரீட் மூலம் அவற்றின் கரைகளை பலப்படுத் தவில்லை. நீர் தேங்கினால் உடைந்துவிடும் சூழலும் இந்தக் குளங்களில் இல்லை. கரைகள் பலமாகவே உள்ளன.
கரையை ஒட்டிய தாவரங்களை அகற்றிவிட்டால், அதை நம்பியிருக்கும் புழு, பூச்சிகள் இருக்காது. அவை இல்லையெனில் சிறிய பறவைகள் இருக்காது. புதர்களில் முட்டை வைக்கும் வாய்ப்பும் போய்விடும். கரைகளின் உட்பகுதியில் கான்கிரீட்போடுவது தேவையில்லாத செலவு. கரையிலிருக்கும் மண்ணைக் கொண்டே பலப்படுத்தலாம். இல்லையேல், பனை மரங்கள் வைக்கலாம் வளர்க்கலாம். கருங்கற்களை உட்புறமாக பதிக்கலாம்" என்றார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, "குளங்களின் கரையை வலுப்படுத்த, கரையின் உட்புறத்தில் தோண்டி கான்கிரீட் அடித்தளம் அமைத்து, சுவர் எழுப்பி, சரிவாக கற்கள் பதிக்கப்படுகின்றன. குளக்கரையின் மொத்த நீளத்துக்கும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எங்கு அவசியமோ, அந்த இடத்தில் மட்டுமே கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. பாதிப்புகள் குறித்து இயற்கை ஆர்வலர்கள் மனுவாக அளித்தால், நிச்சயம் பரிசீலிப்போம்" என்றனர்.