

மதுபானங்களை அநியாய விலைக்குக் கூடுதல் தொகைக்கு விற்பதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் டெபிட், கிரெடிட் கார்டுகளில் மதுபானங்களை வாங்கும் முறையை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,330 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிகப்பு மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கவில்லை. பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் இயங்கி வருகின்றன.
இங்கெல்லாம் முன்பு வசூலிக்கப்பட்டதை விடவும் கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் நிறைய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆகவே இதைத் தடுக்க மதுக்கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவிகளை வைத்து டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அதற்கான கருவிகள் நிறுவுவது, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வு செய்ய சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டது. இதில் 7 வங்கிகள் பங்கேற்றதையடுத்து குறைந்த ஒப்பந்தப் புள்ளியைக் குறிப்பிட்ட ஐசிஐசிஐ வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவிகளை வைக்கும் பணி தொடங்கப்பட்டு இருமாதங்களில் இது நிறைவடையும் என்று தெரிகிறது.
டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லாது, யூனிஃபைடு பேமெண்ட் இண்டர்பேஸ் மூலமும் பணம் கொடுத்து மதுபானங்களைப் பெறலாம்.