

தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கரோனா தடுப்புப் பணிகள்குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் பழனிசாமி, 15 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு ரூ.33.31 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
4 துறைகளின் கீழ் ரூ.20.86 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.15. 16 கோடி மதிப்பீட்டில், முடிவடைந்த 14 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
அதன்பின், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, திட்ட இயக்குநர் பி.மகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயி சங்க பிரநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியது: கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட முயற்சியால், தற்போது அது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
சிறு, குறு தொழில்களை மேம்படுத்த தமிழகத்தில் கரோனா கடனுதவித் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 19 ஆயிரத்து 217 நிறுவனங்களுக்கு ரூ.7,029 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இது 10 சதவீதமாகும்.
கரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதல் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் நேரடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு குறை தீர் முகாம்
தமிழகத்தில் அரசே மக்களை சந்திக்கும் வகையில் முதல்வரின் சிறப்பு குறை தீர் முகாம் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடந்து வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரம் ஏரிகள், ஊராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள26 ஆயிரம் ஏரிகள் என மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இத்திட்டம் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
சாலை மேம்பாடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54,137 மனுக்கள் பெறப்பட்டு, 15,423 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுஉள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48,865 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோமுகி, கெடிலம், மணிமுக்தா நதிகளில் 9 தடுப்பணைக் கட்ட ஆய்வு நடத்தப்பட்டுகிறது.
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுச்சாலை அமைக்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் - உளுந்தூர்ப்பேட்டை சாலையை ரு.130 கோடியில் இருவழிச் சாலையாக மாற்ற ஒப்பந்தம் விடப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.